புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிபிஐ கைப்பற்றிய அதிகாரிகளின் டைரியில் முக்கிய புள்ளிகள் பெயர்: அதிமுக முன்னாள் அமைச்சர் உறவினர் கைதான வழக்கில் பரபரப்பு தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிபிஐ கைப்பற்றிய அதிகாரிகளின் டைரியில் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் தீனதயாளன் (57). கடந்த 22ம்தேதி தனது மகளின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க காரைக்காலில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த ஒப்பந்ததாரர் இளமுருகன் தலைமை பொறியாளர் தீனதயாளன் முன்னிலையில் செயற்பொறியாளர் சிதம்பரநாதனிடம் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது சிபிஐ அதிகாரிகள் தங்கும் விடுதியை சுற்றி வளைத்து 3 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைதான இளமுருகன் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாக தலைமை பொறியாளர் அலுவலம், செயற்பொறியாளர், ஒப்பந்தாரர் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனையிட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதில் தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டிலிருந்து ரூ.63 லட்சம், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் வீட்டிலிருந்து ரூ.8 லட்சம் என மொத்தம் ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ரூ.7.44 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிக்கு லஞ்சம் வாங்கியதாக தலைமை பொறியாளர், செயற்பொறியாளர் மற்றும் ஒப்பந்தாரர் உள்ளிட்ட 3 பேரும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இவர்கள் 3 பேரிடம் சுமார் 22 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிபிஐ அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்தின் அறையை திறந்து மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது தலைமை பொறியாளர் எத்தனை பணிகள் மேற்கொண்டார் என்பது பற்றியும், அவரது டைரி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட சில ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

மேலும் அதிகாரிகளின் டைரியில் யாருக்கு என்ன டெண்டர் கொடுக்கப்பட்டது, அதில் எவ்வளவு லஞ்சம் பெறப்பட்டது, யாருக்கெல்லாம் பங்கு வழங்கப்பட்டது என்பது குறித்து தகவல் உள்ளதாக தெரிகிறது. அதில் சில முக்கிய புள்ளிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாம். இதை பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இவ்விவகாரத்தில் சிபிஐ அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால் புதுச்சேரியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலக்கத்தில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகின்றன.

The post புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிபிஐ கைப்பற்றிய அதிகாரிகளின் டைரியில் முக்கிய புள்ளிகள் பெயர்: அதிமுக முன்னாள் அமைச்சர் உறவினர் கைதான வழக்கில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: