ஈரோடு : ஈரோடு மாவட்டம் பர்கூர் அடுத்த மலைக்கிராமம் சோளகனை.சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, அப்போதைய முதல்வர் ஜெயலிலதா ஆட்சிக்காலத்தில் இருந்த அதிரடிப்படையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பல தலைமுறையாக வசித்து வரும் கிராம மக்களுக்கு சாலை, தெருவிளக்கு மற்றும் பஸ்வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.
மேலும், வனப்பகுதியில் கிடைக்கும் நெல்லி,பலாப்பழம், கோரைப்புற்கள் ஆகியவற்றை சேகரித்து, பர்கூர், தாமரைக்கரை,தட்டக்கரை,அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், பர்கூரில் இருந்து 8 கி.மீ தொலைவில், வனத்தின் மையப்பகுதியில் சோளகனை கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு செல்ல சாலை வசதியும் இல்லை. பேருந்து வசதியும் இல்லை. ஜல்லிக்கற்கள் மட்டும் ஆங்காங்கே கொட்டிய நிலையில், தார் போடாமல், கரடு முரடாகவும், மேடும் பள்ளமாகவும் காணப்படுகிறது.
சோளகனை மக்கள், பர்கூர் பகுதிக்கு வர வேண்டுமானால், அந்த கரடு முரடான பாதையில், சுமார் 8 கி.மீ தூரம், ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நடந்து வர வேண்டும். ஒரு சிலர் இடத்தில் இருசக்கர வாகனங்கள் இருந்தாலும் கூட, முதியோர்கள், பெண்கள் நடந்து வர வேண்டும். குறிப்பாக, வனப்பகுதியில் காணப்படும் கோரைப்புற்களை சேகரித்து, தலையில் வைத்தவாறே, 8 கி.மீ தூரத்தைக் கடக்க வேண்டும்.
மேலும், நடைபாதையில் மின் விளக்கு இல்லாததால், வெளியூர் சென்று வீடு திரும்பும் சோளகனை கிராம மக்கள், கையில் டார்ச் பிடித்தப்படியே நடந்து வருகின்றனர்.யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் அவர்கள் நடந்து வர வேண்டிய அவலம் இருக்கிறது.
இதுகுறித்து சோளகனை கிராம மக்கள் கூறியதாவது:சோளகனை கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, வனப்பொருள் சேகரிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு, வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.நாங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது என்றால், கிராமத்தில் இருந்து 8 கி.மீ வனப்பகுதியில் நடந்து, பர்கூர் செல்ல வேண்டும்.
வனப்பகுதியில், சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், தினமும் அச்சத்துடனே கரடு முரடான மண் பாதையில் நடந்து செல்கிறோம்.
தங்களது கிராமத்திற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுக்கு மேலாக, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், வனப்பகுதி என்பதால், வனத்துறையின் தடையின்மை சான்று பெற வேண்டும் என்பதால், கிராமத்தில் திட்ட பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஏற்கனவே, கடந்த சில ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட மண் சாலை, மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டதால் ஓரிரண்டு ஆண்டுகளிலேயே மண்சாலை காணாமல் போய், ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது.
இதேபோன்று, பேருந்து வசதியோ, சோளகனை கிராமத்தில் இருந்து பர்கூர் செல்லும் நடைபாதையில் மின் விளக்குகள் வசதியோ இல்லாததால், வெளியூர் சென்று இரவு நேரத்தில் வரும் போது வனவிலங்குகளால் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.
குறிப்பாக, வனப்பகுதியில் சேகரிக்கப்படும் கிழங்குகள், நெல்லி, கொய்யா, கோரைப்புற்களை விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அதனையெல்லாம் தூக்கிக் கொண்டு நடைபாதையாக செல்ல வேண்டியதாக இருக்கிறது.
எனவே, பர்கூர் முதல் சோளகனை கிராமம் வரை சாலை அமைத்து, தினசரி ஒருமுறையாவது பேருந்து வந்து செல்லவும், நெடுகிலும் மின் விளக்கு வசதிகள் அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சோளகனை கிராம மக்கள் தெரிவித்தனர்.
The post சாலை,தெருவிளக்கு,பஸ்வசதி இல்லை அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் சோளகனை மலைக்கிராம மக்கள் appeared first on Dinakaran.