கோபி அருகே பரபரப்பு மகன் குடிப்பழக்கத்தால் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

*மனவேதனையில் கழுத்தை அறுத்து கொண்ட மகன்

கோபி : கோபி அருகே மகன் குடிப்பழக்கத்தை மகன் விடாததால் 70 வயது தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தன் கண்முன்னே தாய் கிணற்றில் குதித்ததால் மனவேதனை அடைந்த மகன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கடத்தூர் ஆண்டிபாளையம் சாணார்புதூரை சேர்ந்தவர் சரவணக்குமார் (47). விவசாயி. இவரது மனைவி சாந்தி (43). தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மது அருந்தும் பழக்கத்தால் சரவணக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், 2 ஆண்டுக்கு முன் கணவரை பிரிந்த சாந்தி ஆண்டிபாளையத்தில் வசிக்க துவங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சாணார்புதூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கழுத்தில் ரத்தம் வடிய சரவணக்குமார் நடந்து சென்றதை பார்த்த கிராம மக்கள் கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கழுத்து அறுபட்ட காயத்துடன் இருந்த சரவணக்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர். பேச முடியாத நிலையில் இருந்த அவர், பேப்பரை வாங்கி தாயார் ராமாயம்மாள் (70) அருகில் உள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகவும், அவரை தான் கொலை செய்யவில்லை என்றும் எழுதி காண்பித்து உள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சரவணக்குமாரை கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சரவணக்குமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தாயை அவர் கிணற்றுக்குள் தள்ளிவிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் நம்பியூரில் இருந்து தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் ராமாயம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் நேற்று காலை கிணற்றில் இருந்து ராமாயம்மாள் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சரவணக்குமாரின் குடிப்பழக்கத்தினால், அவரது மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்றதும், குடிப்பழக்கத்தை கைவிட ராமாயம்மாள் பல முறை கூறியும், சரவணக்குமார் குடிப்பழக்கத்தை கைவிடவில்லை என்பதும், இதனால் மனமுடைந்த ராமாயம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும், தனது கண் முன் தாய் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து மன வேதனை அடைந்த சரவணக்குமார், தாய் தற்கொலைக்கு தான்தானே காரணம் என எண்ணி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கோபி அருகே பரபரப்பு மகன் குடிப்பழக்கத்தால் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: