தேவையைவிட கூடுதலாக மின்சாரம் தமிழகத்தில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: ‘தேவையைவிட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. தமிழகத்தில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய ஆளுமை மிக்க தலைவராக இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோடை காலத்தை பொறுத்தவரை மின் தேவையை சமாளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நம்முடைய தேவையைவிட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. எனவே, கோடை காலத்தை சமாளிப்பதற்கு என்ன கூடுதல் மின்சார தேவை ஏற்படுகிறதோ அது டெண்டர் மூலமாக பெறப்பட்டு தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். மின்சார நிறுத்தம் அல்லது மின்வெட்டு என்பது எங்கேயும் இல்லை, ஏதாவது ஒரு இடத்தில் வெப்பம் காரணமாக பழுது ஏற்பட்டு இருந்தால், அதனை இந்த அதிமுகவும், பாஜவும் குற்றச்சாட்டாக கருதி மக்களிடம் கொண்டு போய் எப்படி சேர்க்கலாம் என்று பார்க்கின்றார்கள்.

மின்சார பழுது ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வதற்கு போதிய ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் அமையும். 70 ஆயிரம் மெகாவாட் திறன் பிளான்ட் போடுவதற்கான திட்டங்களை மின்சார வாரியம் முன்னெடுத்து உள்ளது. 2000 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. பாஜ சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

பாஜ தலைவர் அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023ம் ஆண்டு பேசும்போது, மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை என கூறுகிறார். ஆனால் 2024ம் ஆண்டு அவர் பேசும்போது அவர்கள் வந்துவிட்டால் மதுவிலக்கு வந்துவிடும், கடைகளை மூடி விடுவோம் என்று கூறுகிறார். அவர் 2023ல் பேசியதும், 2024ல் பேசியதும் என்னுடைய செல்போனில் வீடியோவாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post தேவையைவிட கூடுதலாக மின்சாரம் தமிழகத்தில் மின் வெட்டு எங்கேயும் ஏற்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: