ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி நூர் நிஷா திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். சரணடைந்த கார்த்திக், அக்பர் ஷா ஆகியோரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள், நெல்லை டவுனில் உள்ள இடத்தை நாங்கள் அனுபவம் செய்ய ஜாகீர் உசேன் பிஜிலி தொடர்ந்து தடையாக இருந்ததுடன், எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதால் வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலியின் மகன் இச்சூர் ரகுமான் பிஜிலி, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அடுத்த டார்கெட் நான் என எண்ணத்தோன்றுகிறது. எனது அப்பா கொலை சம்பவத்தில் எப்படி வீடியோ பயன்பட்டதோ அதுபோல் எனக்கும் நான் இப்போது எடுக்கும் இந்த வீடியோவும் பயன்படும். காரணம் நான் வீட்டில் இருக்கும்போது மர்ம நபர் ஹெல்மட் அணிந்து கொண்டு வீடியோ எடுத்தார். நான் வெளியே வந்ததும் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் யாரென்றே தெரியவில்லை. சாவை நினைத்து பயப்படவில்லை. சாவிற்குப் பிறகான இருக்கும் பொறுப்பை நினைத்து பயப்படுகிறேன். இப்படிச் சொல்லக் காரணம் எனது அப்பா கொலை சம்பவத்தில் தொடர்புடைய 4வது குற்றவாளி இதுவரை போலீசாரால் கைது செய்யப்படவில்லை. அவர் வெளியே இருந்தால் ஜாமீனுக்கு மனு அளிப்பார். சாட்சிகளை கலைப்பார். அவரை எப்போது காவல் துறை கைது செய்யப்போகிறது?. அவரை பிடிக்க தாமதமாவது குற்றவாளிகளுக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாகத் தெரிகிறது.
உடலை வாங்க மாட்டோம் என நிபந்தனை விதித்ததாலேயே கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து. உதவி கமிஷனரை சஸ்பெண்ட் செய்தீர்கள். உதவி கமிஷனர் கடந்த 2022ம் ஆண்டு நாமக்கலில் பணிபுரியும் போது இதுபோன்று ஒரு நபர் மீது பிசிஆர் வழக்கு தொடர்ந்து அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே வேலையை அவர் செய்து வருகிறார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
2018ல் இருந்தே இப்பிரச்னை தொடருகிறது. எந்த ஆட்சியையும் குறை சொல்லவில்லை. தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சி எடுத்தால் அதுவே அரசுக்கு கெட்டப் பெயரைப் பெற்றுத் தரும். 4வது குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
* வேவு பார்த்து தகவலளித்த பிளஸ் 1 மாணவர் சிக்கினார்
ஜாகீர் உசேன் பிஜிலி கொலை வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக்கின் உறவினரான 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் செல்லும் இடங்களை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் அளித்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று அதிகாலையில் அவர், பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றதையும்,பள்ளிவாசலில் இருந்து வெளியே வருவதையும் படம் பிடித்து செல்போனில் அனுப்பியதும் தெரிந்தது. இதையடுத்து சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். கைதான சிறுவன், நெல்லை டவுனில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
* ஜாகீர் உசேன் வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
எஸ்ஐயின் மகன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதி மணி உத்தரவின் பேரில் டவுன் உதவி கமிஷனர் அஜீக்குமார் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து ஜாகீர் உசேன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 6 இடங்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
The post குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் என குற்றச்சாட்டு ‘அடுத்த டார்கெட் நான்தான்’: கொலையான மாஜி எஸ்ஐ மகனின் புதிய வீடியோ வைரல் appeared first on Dinakaran.