மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பாஜ அரசு மேற்கொள்ள உள்ள நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த 5ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், இப்பிரச்னையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் உள்ள கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை கொண்டு ‘கூட்டு நடவடிக்கை குழு’ அமைத்து, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சி தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடந்த 7ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்பது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்னைக்கு அப்பாற்பட்டது என்றும், கூட்டாட்சி கொள்கையை இது வெகுவாக பாதிக்கும் என்பதால், இப்பிரச்னையின் அரசமைப்புரீதியான, சட்ட மற்றும் அரசியல்ரீதியான பரிமாணங்களை பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் உரிய தீர்வுகளை இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும், தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா, கிழக்கில் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா, வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவில் சேர தங்களின் முறையான ஒப்புதலை அளிக்க வேண்டுமென்றும்; கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் பாதிப்புக்குள்ளாகும் மாநில கட்சியில் இருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பினை ஏற்று, நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். இதையடுத்து கனிமொழி எம்பி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார். தொடர்ந்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: பல்வேறு மாநிலங்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளாமல் செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை இல்லாமை, தெளிவு இன்மை ஆகியவை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றோம்.

இந்தியாவில் வளர்ச்சியடைந்துள்ள மாநிலங்களின் அரசியல் – பொருளாதார எதிர்காலத்தை பாதுகாக்க இந்த கூட்டு நடவடிக்கை குழுவை ஒருங்கிணைத்தமைக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கின்றோம். இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளின் உரையாடல்களில் முன்வைத்த பல்வேறு கருத்துகள், வெளிப்படுத்திய அக்கறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், ஒருமனதாக பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றோம்.

* ஜனநாயக முறையையும் பண்பையும் மேம்படுத்தும் நோக்கிலேயே ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டும். அந்நடவடிக்கையை வெளிப்படையாகவும், தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், மாநில அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, உரையாடல் மேற்கொண்டு, அவர்கள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

* 42வது, 84வது, 87வது அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பின்னால் உள்ள நோக்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களை பாதுகாப்பதும் / ஊக்குவிப்பதும், தேசிய மக்கள்தொகையை நிலைப்படுத்தலும் ஆகும். இந்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பை தள்ளிவைத்து, மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.

* மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி, அதன் விளைவாக மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக ஒன்றிய அரசு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை செய்ய வேண்டும்.

* பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு குழு, மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகளுக்கு முரணாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.

* நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு குழு, நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, மேற்குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்திய பிரதமருக்கு தங்களது கருத்தை தெரிவிக்கும்.

* கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்த பிரச்னையில் அந்தந்த மாநிலங்களில் சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்றி, அதனை ஒன்றிய அரசுக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

* ஒருங்கிணைந்த பொதுகருத்தை உருவாக்க, கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறும், அந்நடவடிக்கைகளின் விளைவுகளும் குறித்த தகவல்களை அந்தந்த மாநில பொதுமக்களிடையே பரப்புவதற்கு கூட்டு நடவடிக்கை குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* பங்கேற்றவர்கள் யார், யார்?
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினாய் விஸ்வம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சலாம், கேரளா காங்கிரஸ் கட்சியின் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே.மணி,

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், தெலங்கானா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ் மற்றும் வினோத்குமார், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியின் இம்தியாஸ் ஜலில், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங் மற்றும் தல்ஜித் சிங் சீமா,

பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக் மற்றும் சஞ்சய்குமார் தாஸ் பர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில் ‘‘தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படும்’’ என்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன்பேரில், அடுத்தக் கூட்டம் ஐதராபாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேதி முடிவு ெசய்யப்படவில்லை. பின்னர் தேதி அறிவிக்கப்படும்’’ என்றார்.

The post மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: