ஊட்டி : கோடை காலம் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லவும், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சமைக்கவும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்து வரவும் தடை விதித்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி வன கோட்டம் சார்பில் காடுகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உலக வனநாள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
ஊட்டி அண்ணா கலையரங்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேரணியை நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ஒரு வனம் அழியும் போது வெறும் மரங்கள் அழிவதில்லை. அதனுடன் சேர்த்து தாவரங்கள், மூலிகைள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை அழியும். காடுகள் அழிக்கப்படுவதால் தட்பவெப்ப நிலையில் மாறுபாடு ஏற்படுகிறது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி சேரிங்கிராஸ், மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் வரை நடந்தது. இதில் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
முன்னதாக மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில், ‘‘ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லவும், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சமைக்கவும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்து வருவதையும் தவிர்க்க வேண்டும்.
கோடைகாலத்தில் காட்டு தீ ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் தடையை மீறி செயல்பட கூடாது. அத்துமீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post கோடைகாலம் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் தீ மூட்டி சமைப்பதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.