தஞ்சாவூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மாநகராட்சிக்கு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்த பிறகு சான்றிதழ் பெற நேரடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதை தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் முறையாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பித்தவர்களுக்கு நேரடியாக தபாலில் வழங்கும் சேவையை மேயர்.சண்.ராமநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுபற்றி மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பதாரரின் முகவரிக்கு தபாலில் வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ்கள் தபாலில் அனுப்பப்படும். அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் சான்றிதழ்கள் பதிவு தபால் மூலம் வீடு தேடி செல்லும். இந்த சேவைக்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதேபோல் வரும் 1ம் தேதி முதல் மாநகராட்சியின் சொத்து வரி, பெயர் மாற்றம் மற்றும் அனைத்து பிற சான்றிதழ்களையும் தபாலில் பெறும் சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வீடு தேடி பிறப்பு, இறப்பு சான்றிதழ்: தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சையில் தொடக்கம் appeared first on Dinakaran.