சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்: பேரவைத் தலைவர் அவர்களே, ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், கொடுக்கூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு செளந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு திருப்பணி செய்யும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?
அமைச்சர் சேகர்பாபு: பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. நம்முடைய உறுப்பினர் இந்த கேள்வியை கேட்டாலும், பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்பவர் நாத்திகர் என்றாலும், ஆசிரியருக்குண்டான பணியையும் சேர்ந்து செய்வது போல் தினந்தோறும் எங்கள் மாவட்டத்தில் இருக்கிற இந்த கோயில் திருப்பணி என்ன ஆயிற்று? அந்த கோயில் என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு இணங்க, ரூ.41.50 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலில் திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தற்போது 10 சதவீதப் பணிகள் முடிவற்றுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமிருக்கின்ற பணிகளையும் நிறைவேற்றி குடமுழுக்கு நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்: பேரவைத் தலைவர் அவர்களே, ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் கொடுக்கூர் அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் மட்டுமல்ல, என்னுடைய ஜெயங்கொண்டம் தொகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அனைத்து கோயில்களுக்கும் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு உத்தரவிட்ட திராவிட மாடல் நாயகன் முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் அவர்களுக்கும், எனது தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டு, ஆண்டிமடம் ஒன்றியம், புதுக்குடி ஊராட்சியிலுள்ள அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் ஜெயங்கொண்டம் ஒன்றியம், முத்துசேர்வாமடம், அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய இரண்டு பழமையான திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தித் தர அமைச்சர் அவர்கள் முன்வருவாரா என தங்கள் வாயிலாக கேட்டு வருகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களுக்கும் திருப்பணி மேற்கொள்ள 19.04.2025 அன்று பாலாலயம் செய்யப்பட உள்ளது. உறுப்பினர் அவர்கள் மனநிறைவோடு அந்த பாலாலயத்தில் கலந்து கொண்டு திருப்பணி துவக்கி வைத்த பிறகு, இந்த ஆண்டுக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்: பேரவை தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியம் இறவான்குடி-கல்லேரியில் இருக்கின்ற ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீரனார் திருக்கோயிலை அப்பகுதி மக்கள் புனரமைப்பு செய்வதற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆதிதிராவிடர் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின் கீழ் அதனை செய்து தருவதற்கு அமைச்சர் அவர்கள் முன் வருவாரா என அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, அவர் கோரிய இந்த வீரனார் கோயில் என்பது ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயிலாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு திராவிட மாடல் ஆட்சி நாயகன், முதல்வர் அவர்கள் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களுக்கும், கிராமப்புற திருக்கோயில்களுக்கும் செய்தவற்றை ஒரு நிமிடத்தில் சொல்ல பேரவை தலைவர் அனுமதி வேண்டுகிறேன். இந்த ஆட்சி ஏற்பட்டவுடன் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில் மற்றும் கிராமப்புற திருக்கோயில் எண்ணிக்கையை கணக்கிட்ட போது ஆண்டுதோறும் தலா ஆயிரம் திருக்கோயில்களுக்கு ஒரு லட்ச ரூபாய் என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த திருப்பணி நிதியுதவி ஒரு லட்ச ரூபாயை இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு, ஆயிரம் என்று இருந்த எண்ணிக்கையை தலா 1,250 திருக்கோயில்கள் என உயர்த்தி, ஒன்றை இரண்டாக்கினார் நமது முதலமைச்சர் அவர்கள்.
அந்த நிதியுதவி ரூபாய் இரண்டு லட்சமும் போதவில்லை என்று தற்போது இரண்டரை லட்சமாக உயர்த்தி தலா 5,000 திருக்கோயில்கள் என்று இதுவரையில் 10,000 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த திருப்பணிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்றால் ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்ற பகுதி திருக்கோயில்களுக்கு ரூ.106 கோடியும், கிராமப்புறத் திருக்கோயில்களுக்கு ரூ.106 கோடியும் என மொத்தம் ரூ.212 கோடியை வழங்கிய முதல்வர் நமது முதல்வர் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு வீரனார் கோயில் திருப்பணி பட்டியலில் ஏற்கனவே இணைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்: பேரவை தலைவர் அவர்களே, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 230 திருக்கோயில்கள் உள்ளன. அதில் 200 திருக்கோயில்களுக்கு சுமார் 3,000 ஏக்கர் மானிய நிலங்கள் உள்ளன. அந்த 3,000 ஏக்கரில் 1,700 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,000 ஏக்கரை கண்டறியப்பட வேண்டும். அந்த திருக்கோயில்களுக்கு அறநிலையத்துறை பணியாளர்கள் யாரும் இல்லை. 230 திருக்கோயில்களுக்கு மூன்று செயல் அலுவலர்களும், 2 ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பி அந்த சொத்துக்களையும் கோயில்களையும் பாதுகாக்க முன் வருமா என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் 200 திருக்கோயில்களுக்கு சொந்தமாக 3,000 ஏக்கர் நிலம் இருப்பதாகச் சொன்னார். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல்வர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லை என்ற கருத்து வந்தவுடன், வருவாய் துறையின் வாயிலாக 38 வருவாய் மாவட்டங்களுக்கும் 38 வட்டாட்சியர்களையும், அவர்களுக்கு உதவியாக இரண்டு சர்வேயர்களையும் நியமித்து ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இரண்டு ரோவர் கருவிகள் வீதம் அளித்ததன் வாயிலாக இதுவரை 7,200 கோடி ரூபாய் அளவிற்கு திருக்கோயில் நிலங்களை மீட்ட ஆட்சி முதல்வர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியாகும்.
நீங்கள் வைத்த இந்த கோரிக்கையை ஏற்று நீங்கள் விடுமுறை நாளில் ஊரில் இருக்கின்ற போது, அந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற வட்டாட்சியர் மற்றும் சர்வேயர்களையும், மண்டல இணை ஆணையரையும் உங்களை சந்திக்க சொல்கிறேன். எந்த நிலங்கள் எல்லாம் இன்னும் மீட்கப்படவில்லை என்ற பட்டியலை தந்தால் உடனடியாக அந்த நிலங்களை மீட்பதற்குண்டான பணி தொடரும். இந்த ஆட்சியில் நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் நிலங்களை மீட்கின்ற வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்: பேரவை தலைவர் அவர்களே, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட திருவாப்புடையார் திருக்கோயிலை புனரமைப்பு செய்திட உபயதாரர்களும் நிதி தர ரெடியாக இருக்கின்றார்கள். அதனை அமைச்சர் அவர்கள் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் பழமையான கோயிலாகும். முதல்வர் அவர்கள், இதுபோன்று வருமானம் இல்லாமல் இருக்கின்ற பழமையான திருக்கோயில்களுக்கு பிரத்யேகமாக ஆண்டிற்கு ரூ.100 கோடி என்று கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். மேலும், இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.125 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். ஆகமொத்தம் ரூ.425 கோடி அரசின் சார்பிலும், ரூ.130 கோடி உபயதாரர்கள் மூலமாகவும் என ரூ.555 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025-2026 ஆம் ஆண்டிற்கான 1,000 ஆண்டு திருக்கோயில் திருப்பணி பட்டியலில் நீங்கள் கூறிய திருவாப்புடையார் கோயிலும் இணைக்கப்பட்டிருக்கிறது. வெகுவிரைவில் அந்த திருக்கோயிலுக்கு திருப்பணிகள் தொடங்க பாலாலயம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்: பேரவை தலைவர் அவர்களே, இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தரகோசமங்கை என்ற சிவ ஸ்தலம் நவகிரகங்களே இல்லாத சிவ ஸ்தலம் என்று பக்தர்களால் வழங்கப்படுகிறது. இலங்கை மன்னன் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் அந்த சிவ ஸ்தலத்தில் இருக்கிறது. சேது மன்னருடைய பராமரிப்பில் சமஸ்தானத்தில் இருந்ததை நம்முடைய கழக அரசு வந்தவுடன் அமைச்சர் அவர்கள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு நடத்துவதற்கு முதல் நிதியாக வழங்கினார்கள்.
தனியார் பங்களிப்போடு மிகப் பிரமாண்டமான ராஜகோபுரம், வளாகங்கள் மற்றும் கிழவன் சேதுபதி மன்னன் விட்டு சென்ற அர்த்தமண்டபங்கள் போன்றவற்றை பராமரித்து கொண்டு வருகிறார்கள். வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் இருந்து குறிப்பாக கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதியிலிருந்து அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். ஏறத்தாழ இராமநாதபுரத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. நம்முடைய கழக அரசின் சார்பில் உள்ளூர் விடுமுறை அளித்து, சமஸ்தான திருக்கோயிலாக இருக்கின்ற காரணத்தினால் அமைச்சர் அவருடைய கண்காணிப்பில் குடமுழுக்கை நடத்த வேண்டும் என்று அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் சேகர்பாபு: பேரவை தலைவர் அவர்களே, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட உத்தரகோசமங்கை திருக்கோயிலானது முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சமஸ்தானத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த திருக்கோயில் எடுத்துக் கொள்ளப்பட்டு அரசினுடைய நிதியாக ரூ.2 கோடியை வழங்கினோம். அந்த திருக்கோயிலுக்கு அடுத்த மாதம் நான்காம் தேதி வெகு சிறப்பாக குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு உறுப்பினர் அவர்களின் கோரிக்கை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் விரும்பியவாறு, மகிழ்ச்சி அடைகின்ற வகையில் இந்த ஆட்சி நிச்சயமாக குடமுழுக்கை நடத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
The post சட்டமன்றப் பேரவையில் இன்று வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.