மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் ஊராட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 2000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இவர்கள் ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் செலவிட்டு நெல் பயிர் செய்கின்றனர். அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை தனியாருக்கு விற்பனை செய்யும்போது குறைவான விலையே கிடைக்கும் என்பதால் தமிழக அரசின் சார்பில் திறக்கப்படும் நேரடி கொள்முதல் நிலையத்தை இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெரும்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பன் மற்றும் அதிகாரிகள் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏரி நீர் பாசன சங்கத்தலைவர் மற்றும் விவசாயிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பெரும்பாக்கம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.
