தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசித்து வருகின்றனர். தோடர் இன மக்களின் தலைமை மந்தாக முத்தநாடு மந்து உள்ளது. தோடர் இன மக்கள் தங்கள் வசிக்கும் கிராமமான மந்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் ஊட்டி நகரில் தாவரவியல் பூங்கா வளாகத்தில் மேற்புறம் மஞ்சக்கல் மந்து எனப்படும் கார்டன் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் கோயில் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. கோயில் பராமரிப்பின்றி இருந்த நிலையில் இதனை முழுவதுமாக புதுப்பித்து வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இதன் தொடர்ச்சியாக கூரை வேயும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோரக்குந்தா, அப்பா் பவானி உள்ளிட்ட வனங்களில் கிடைக்க கூடிய மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு நேற்று தோடர் இன மக்கள் தங்களின் பராம்பரிய உடையணிந்து வழக்கமான உற்சாகத்துடன் கூரை வேய்ந்தனர். தொடா்ந்து அவா்களின் பாரம்பாிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தோடா் பழங்குடியினத்தை சோ்ந்த மணிகண்டன் கூறுகையில், ‘‘கார்டன் மந்து பகுதியில் உள்ள கோயிலை பொள்ளி வேஷ்த் எனப்படும் புதுப்பித்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. அனைத்து மந்துகளில் உள்ள தோடா் இன ஆண்கள் விரதம் இருந்து கடந்த 1 மாதமாக கோயில் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். இன்று (நேற்று) மூங்கில்கள், புற்கள் கொண்டு கூரை வேய்ந்தனர். தொடா்ந்து, பாரம்பாிய நடன நிகழ்ச்சி நடந்தது’’ என்றாா்.
The post ஊட்டி கார்டன் மந்து பகுதியில் தோடா் கோயில் அமைக்கும் நிகழ்ச்சி: தோடர் பழங்குடியினர் ஏராளமாக பங்கேற்பு appeared first on Dinakaran.