6 நாட்கள் மலர் கண்காட்சி… 3 நாட்கள் ரோஜா கண்காட்சி.. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு இதமான காலநிலையை அனுபவிக்க உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கையில்; நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி மே 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 3,4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நடைபெறும். மே 9 மற்றும் 10,11 ஆகிய தேதிகளில் கூடலூரில் 11வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. மே 10,11,12 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி நடைபெறுகிறது.

கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. மே 23,24,25 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக் கண்காட்சி நடக்கிறது. முதல்முறையாக குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் மே 30 முதல் ஜூன் 1ம் தேதி மூன்று நாட்கள் மலை பயிர்கள் கண்காட்சி நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 6 நாட்கள் மலர் கண்காட்சி… 3 நாட்கள் ரோஜா கண்காட்சி.. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: