சுற்று வட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், பரந்தூர், வேடல், ராஜகுளம், வாலாஜாபாத், தூசி, மாமண்டூர், வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் வசதிக்கென காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, புதுச்சேரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்றுவர இரு நுழைவாயில் உள்ளது.
இதில், காமராஜர் வீதி நுழைவாயில் பகுதி சாலையின் இருபுறமும், நடைபாதையை ஆக்கிரமித்து பழம், டீ, ஸ்வீட்ஸ், பூக்கடை, உணவகம் என பல்வேறு கடைகள் வைத்துள்ளனர். இந்த, ஆக்கிரமிப்பாளர்கள் நடைபாதை மட்டுமின்றி, சாலையையும் 4 அடிக்கும் மேல் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துவிட்டதால், வாகன போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, அலுவலகம் சென்று வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும், நிலையத்தில் இருந்து பேருந்தை வெளியே ஓட்டிச் செல்ல முடியாமல் ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், பயணிகள் மட்டுமின்றி, சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள நடைபாதை வியாபாரிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் சிக்கி திணறும் பயணிகள்: உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.