இவ்வாறு நியமங்களுடன் இறைவரைப் பூஜிக்கும் அம்பிகையின் உறுதிப் பாட்டைச் சோதிக்க எண்ணிய இறைவர், இவ்வுலகில் உள்ள அனைத்துத் தீர்த்தங்களையும் ஒருங்கு திரண்டு வருமாறு மனத்தில் எண்ணினர். அவ்வாறே தீர்த்தங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு, கம்பையாற்று நீரோடு கலந்து, பிரளய கால வெள்ளம் போல, வானை முட்டி ஆரவாரத்துடன் வருவனவாயின. அதைக் கண்ட தேவர் முதலியோரும் அஞ்சினர். அம்பிகையும் திடுக்கிட்டு, நெஞ்சம் பதைத்து இவ்வெள்ளம் பெருமான் மீது செல்லுமே என நடுங்கித் தம் திருமேனியில் அதிர்ச்சி உண்டாக எழுந்து சென்று ஒரு பச்சைக்கொடி, சிவந்த பொன் மலையை இரண்டு கொழுந்துகளை இரண்டு பக்கங்களிலும் அனுப்பவிட்டுத் தழுவியது போல, பீடத்தில் மீது வலது முழந்தாளை ஊன்றிக் கொண்டு இறைவனைத் தழுவிக் கொண்டார்.அம்மையார் தன் தனங்களாலும், வளையல் அணிந்த கைகளாலும் நெருக்கமாகத் தழுவிக் கொண்டார். அதற்கேற்ப இறைவன் தம் திருமேனியைக் குழைத்து தனத் தழும்பையும் வளைத்தழும்பையும் தன் திருமேனியில் ஏற்று அணிந்து கொண்டார். இதன்மூலம் இறைவர் தழுவக் குழைந்தவர் ஆயினார்.காஞ்சியில், சிவபெருமானின் இத்திரு விளையாட்டினைநினைவு கூரும் வகையில் தழுவக்குழைந்த விநாயகர் என்னும் திருப்பெயர் தாங்கி, பிள்ளையார் பாளையம் கிருஷ்ணாராயர் தெருவில் (ஏறக்குறைய வட கோடியில்) சாலையின் ஓரத்தில் கிழக்கு நோக்கிய சந்நதியில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார். சற்றுபெரிய மூல மூர்த்தியாக இப்பெருமான் காட்சி தருகிறார் (காஞ்சியில் வேறு சில பகுதிகளிலும் இப்பெயருடன் சில கோயில்கள் உள்ளன.)
நாகலட்சுமி
The post தழுவக்குழைந்த விநாயகர் appeared first on Dinakaran.