பஞ்சமி நில மீட்பு போராளிகள் நினைவு தினம்: சீமான் நிகழ்ச்சிக்கு வந்தவர்களால் நெடுஞ்சாலையில் கடும் நெரிசல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் நுழைவு பகுதிக்கு அருகே கட்சி கொடியை ஏற்றி வைக்கவும், காரணையில் பஞ்சமி நில மீட்பு போராளிகளின் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காகவும், நேற்று மாலை இசிஆர் வழியாக மாமல்லபுரம் நுழைவு பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். தொடர்ந்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து, அனைவரும் ஒன்றிணைவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர். இதை தொடர்ந்து, மாமல்லபுரம் அடுத்த காரணை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜான் தாமஸ் – ஏழுமலை ஆகியோரின் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து சீமான் மரியாதை செலுத்தினார்.

அப்போது, சீமானுடன் வந்த முக்கிய கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தாங்கள் கொண்டு வந்த 25க்கும் மேற்பட்ட கார்களை மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையை மறித்து மற்ற எந்த வாகனங்களும் செல்லாத வகையில், நடுரோட்டில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் வாகனங்களும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வாகனங்களும் 20 நிமிடங்களுக்கு மேலாக வரிசை கட்டி நின்றதை காணமுடிந்தது.

அரசு பேருந்தில் அமர்ந்திருந்த பெண்கள் பேருந்து செல்ல வழி விடுங்கள் என கெஞ்சியும், யாரும் கார்களை எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பெண்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினரை திட்டி தீர்த்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

The post பஞ்சமி நில மீட்பு போராளிகள் நினைவு தினம்: சீமான் நிகழ்ச்சிக்கு வந்தவர்களால் நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: