விருதுநகர்: விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலை சேதமடைந்தநிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலையில் கருமாதி மடம் பேருந்து நிறுத்தம் அருகே இரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் இரு பகுதிகளிலும் சர்வீஸ் சாலைகள் உள்ளன. இதில் பேவர் பிளாக் கற்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டு சாலைகள் நல்ல நிலையில் இருந்தன. இவ்வழியே சுண்ணாம்புக்காரர் தெரு, கட்டையாபுரம், பழைய அருப்புக்கோட்டை சாலை, நீராவித் தெரு, செந்தி விநாயகபுரம் தெரு, பி.பி.வையாபுரி நந்தவனம் தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். இச்சாலை வழியாகவே, கட்டையாபுரம் பகுதியில் உள்ள பருப்பு மில், எண்ணெய் மில் தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் ஏராளமான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாலை வழியாக புதிய தாமிரபரணிக் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பேவர் பிளாக் சாலைகள் தோண்டப்பட்டது. குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்களுக்கு பின்பும், அங்கு சாலையை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால், அவ்வழியே செல்லும் இரு சக்கர மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மிகவும் அவதியடைகின்றனர். இச்சாலையை பயன்படுத்தும் பள்ளி, மாணவ, மாணவிகளும் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர், விருதுநகரில் அருப்புக்கோட்டை சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் சேதமாகியுள்ள சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விருதுநகரில் சேதமடைந்த ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலை appeared first on Dinakaran.
