மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானைக்கான பூங்கா பணிகள் மீண்டும் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்: காடுகளின் தவிர்க்கவே முடியாத பேருயிர் யானைகள். சங்க காலங்களில் யானைகளுக்கு வேழம், களிறு, பெருமா, பூட்கை, களபம், தந்தவனம், ஆம்பல், கயம், அத்தி, தூங்கல், சிந்துரம், போதகம், மதகயம், வாரணம், இபம், மாதங்கம், அரசுவா என 50க்கும் மேற்பட்ட பெயர்கள் இருந்துள்ளன. தாவர உண்ணியான யானைகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 250 முதல் 300 கிலோ வரை உணவுகளை உட்கொள்ளும். சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100 கி.மீ வரை வனப்பகுதிகளுக்குள் நடை போடும். தாவர உண்ணியான யானைகள் சாப்பிடும் உணவுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுகளில் 10% அளவிற்கு விதைகள் நிறைந்தவை. இதனால் காட்டு யானைகள் நடக்கும் இடங்கள் எல்லாம் வனத்தின் அடர்த்தி அதிகரிக்கும். இந்த அளவிற்கு காடுகளை உருவாக்கும் காட்டு யானைகளை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சி, ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் உள்ள பயிர்களின் ருசி, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மனிதர்கள் வீசி செல்லும் செயற்கை உணவுகள் உள்ளிட்டவற்றின் ருசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் யானை-மனித மோதல்கள் அதிகரித்து வருவதோடு, பயிர்களும் சேதமடைந்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதனால் காட்டு யானைகள் குறித்தும், அதன் குணாதிசயங்கள் குறித்தும், யானைகள் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கில் ‘வேழம் இயலியல் பூங்கா’ என்ற பெயரில் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2020-2021ம் ஆண்டு துவங்கப்பட்டது.

பூங்காவின் நுழைவு வாயிலில் ‘மாமூத்’ என்ற ஆரம்ப காலகட்ட யானையின் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யானைகள் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் அடங்கிய கட்டிடத்தில் உள்ளே எங்கு திரும்பினாலும் யானையின் தந்தம், யானையின் உருவம், யானையின் வரலாறு, அதன் குணாதிசியங்கள், சங்க காலங்களில் யானைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?, சுற்றுச்சூழலில் யானைகளின் பங்கு, வனத்தின் வளர்ச்சியில் யானைகளின் பங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்களும், அதன் கீழே அதற்குரிய விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆப்பிரிக்க யானைகளுக்கும், இந்திய யானைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள், அதன் உருவம், தந்தங்கள், உடல் பாகங்கள் குறித்த அரிய தகவல்களும், உருவங்களாகவும், புகைப்படங்களாகவும், செய்தி விளக்கமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளிக்கும் வகையிலும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அரிய பொக்கிஷமான இந்த பூங்கா துவங்கி 70 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் இடையில் சில ஆண்டுகள் நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த வேழம் இயலியல் பூங்காவை புனரமைக்கும் விதமாக தமிழக அரசு ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நம்ம மேட்டுப்பாளையம் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான பாஷா கூறுகையில், ‘‘காட்டு யானைகள் குறித்தும், வனங்களின் வளர்ச்சியில் காட்டு யானைகளின் பங்கு குறித்தும், சிறப்பு வாய்ந்த யானைகளை பற்றி பொதுமக்களும், குழந்தைகளும் கற்றுக்கொள்ளும் விதமாகவும், யானை-மனித மோதலை தவிர்க்கும் விதமாகவும் கடந்த 2020-21ம் ஆண்டு

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கில் வேழம் இயலியல் பூங்கா துவங்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக பூங்கா அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் நேரிலும், கடிதம் வாயிலாகவும் அமைப்பின் சார்பாக மனுக்களை தொடர்ச்சியாக அளித்து வந்ததன் பலனாக தற்போது இந்த வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணியினை மீண்டும் தொடருவதற்காக தமிழக அரசு தற்போது ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள் பொழுது போக்கும் வகையில் எவ்விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை. அவ்வாறு பொழுது போக்கும் ஒரு இடமாக இருந்து வந்த கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம், இரண்டாயிரம் என பணம் கொடுத்து பொழுதுபோக்குக்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழலில் உள்ளது. இதனையும், வரும் கோடைகால பள்ளி, கல்லூரி விடுமுறையை கருத்தில் கொண்டும் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும் ”. இவ்வாறு அவர் கூறினார்.

The post மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானைக்கான பூங்கா பணிகள் மீண்டும் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: