ஊட்டி: மார்லிமந்து அணை நீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பார்சன்ஸ்வேலி, டைகர் ஹில், மார்லிமந்து, அப்பர் தொட்டபெட்டா, லோயர் தொட்டபெட்டா, கிளன் ராக், ஓல்ட் ஊட்டி, அப்பர் கோடப்பமந்து மற்றும் லோயர் கோடப்பமந்து ஆகிய பகுதிகளில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், மார்லிமந்து அணையில் இருந்து கவர்னர் மாளிகை குடியிருப்பு, தாவரவியல் பூங்கா குடியிருப்புகள், டம்ளர் முடக்கு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அணை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அப்போது, குறைந்த அளவு மக்கள் இருந்தனர்.
இதனால், தண்ணீர் தேவை குறைந்து காணப்பட்டது. ஆனால், தற்போது இந்த அணையை நம்பி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் தினமும் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், அணையில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் மழை பெய்தால் இந்த அணையில் இருந்து வழங்கப்படும் தண்ணீர் மாசு அடைந்து சேறுடன் கலந்து செல்கிறது. இதனால், பொதுமக்கள் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மார்லிமந்து அணையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அணை நீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்கள் வீட்டில் விநியோகம் செய்வதற்காக ரூ.1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் ஏதும் அமைக்கப்படவில்லை. எனவே, உடனடியாக இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை முறையாக சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post மார்லிமந்து அணை தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.