கடையம்: ராமநதி அணையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணை, கடையம் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழை காரணமாக ராமநதி அணையின் முன் பகுதியில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து நீர்வளத்துறையினர் சார்பில் தற்காலிகமாக மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த மணல் மூட்டை சாக்குகளும் தற்போது அடித்து வரும் வெயில் காரணமாக கிழிந்து வருகிறது. எனவே நீர்வளத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக வைக்கப்பட்டு வலுவிழந்து வரும் மணல் மூடைகளை அகற்றி விட்டு நிரந்தரமாக அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அணையின் உள்பகுதியிலும் தூர்வாரும் பணியை மேற்கொண்டால் முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
The post கடையம் ராமநதி அணையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு மேற்கொள்ளப்படுமா?… விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.