ராமேஸ்வரம்: இந்திய – இலங்கை மக்கள் சங்கமிக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு மேல் இருநாட்டு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு கொடியிறக்கப்பட்டதை அடுத்து திருவிழா நிறைவு பெற்றது. இவ்விழாவில் இருநாடுகளையும் சேர்த்து 8,200 பக்தர்கள் கலந்து கொண்டனர். கச்சத்தீவு திருவிழா என்றாலே அன்று முதல் இன்று வரை இந்திய பக்தர்கள் கடலை மிட்டாயை கொடுத்து, ராணி சோப் வாங்குவதும், இலங்கை பக்தர்கள் ராணி சோப்பை கொடுத்து கடலை மிட்டாய் வாங்கி செல்லும் இந்த பண்டமாற்று முறை காலம் தொட்டு பாரம்பரியமாக இன்று வரை உள்ளது. கடந்தாண்டு இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால், வியாபாரிகள் இந்த ஆண்டு அதிகளவு ராணி சோப்புகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதனால், திருவிழா முடியும் முன்பே ராணி சோப்பு விற்று தீர்ந்ததால் ஏராளமான இந்திய பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
The post கச்சத்தீவு திருவிழா நிறைவு: ராணி சோப்பு எங்கேப்பா? appeared first on Dinakaran.