திருமலை: மகன்களின் கை, கால்களை கட்டி பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தடேபள்ளிகுடத்தை சேர்ந்தவர் வனப்பள்ளி சந்திரகிஷோர். இவர் காக்கிநாடா வக்காலப்புடியில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தில் உதவி கணக்காளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தனுஜா. இவரது மகன்கள் ஜோஷில்(7), நிகில்(6). இதில் ஜோஷில் 1ம் வகுப்பும், நிகில் யுகேஜியும் படித்து வந்தனர். சந்திரகிஷோர் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஜோஷில், நிகில் இருவரும் சரியாக படிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் சந்திரகிஷோர் சமீபத்தில் வேறு பள்ளியில் மகன்களை சேர்த்து படிக்க வைத்தார். இந்நிலையில் சந்திரகிஷோர் நேற்று ஹோலி பண்டிகை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அலுவலகத்தில் கொண்டாட அழைத்துச்சென்றார். பின்னர் மனைவியை அலுவலத்திலேயே சிறிதுநேரம் இருக்குமாறும், குழந்தைகளை சீருடைக்கு அளவு கொடுக்க டெய்லரிடம் அழைத்துச்செல்வதாகவும், சில நிமிடங்களில் திரும்பி வருவதாக கூறிவிட்டு பிள்ளைகளை அழைத்து சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்திரகிஷோருக்கு அவரது மனைவி போன் செய்தார். ஆனால் எடுக்கவில்லை. இதனால் தனுஜா சந்தேகத்துடன் தனது சக ஊழியர்களுடன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது சந்திரகிஷோர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 2 குழந்தைகளும் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் மூழ்கி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சர்பவரம் போலீசார் அங்கு வந்து சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தைகளை சந்திரகிஷோர் கை, கால்களை கட்டி தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது. அப்போது, சந்திரகிஷோர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், எனது குழந்தைகளுக்கு சரியாக படிப்பு வரவில்லை, தற்போதைய போட்டி நிறைந்த உலகில் எனது குழந்தைகளால் போட்டியிட முடியாது, அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. எனவே 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மகன்களின் கை, கால்களை கட்டி தண்ணீரில் மூழ்கடித்து கொலை: தந்தை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.
