மரக்காணத்தில் உப்பளங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம்

மரக்காணம், மார்ச் 15: மரக்காணத்தில் உப்பளங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு காலம் தவறி பெய்த கன மழையால் உப்பளங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. இதன் காரணமாக உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணியை பிப்ரவரி மாதத்தில் துவங்கினர்.

முதற்கட்ட பணிகள் முடிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் உப்பு உற்பத்தி துவங்கப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு மீண்டும் உப்பு உற்பத்தியை துவங்க உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீரை வார் பலகைகள் மூலம் வெளியேற்றும் பணியில் உப்பளத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் முடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க குறைந்தது பத்து நாட்களாகும். ஆனால் கோடை மழை பெய்யாமல் இருந்தால் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெறும். எதிர்பாராத விதமாக மீண்டும் கோடை மழை பெய்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் அதிக அளவில் நஷ்டம் உண்டாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

The post மரக்காணத்தில் உப்பளங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: