×

கிள்ளையில் மாசி மக தீர்த்தவாரி பூவராகசாமிக்கு தர்கா சார்பில் பட்டாடை அணிவிப்பு

புவனகிரி, மார்ச் 15: கிள்ளை தைக்கால் பகுதியில் மாசி மக தீர்த்தவாரி விழாவிற்காக வந்த முஷ்ணம் பூவராகசுவாமிக்கு, இஸ்லாமிய தர்கா சார்பில் பட்டாடை அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்று முஷ்ணம் பூவராகசாமி கோயில். ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு முஷ்ணம் பூவராகசாமி, தீர்த்தவாரிக்காக சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை முழுக்குத்துறை பகுதிக்கு வருவார். அதுபோல் இந்த ஆண்டும் மாசி மக தீர்த்தவாரியையொட்டி நேற்று பூவராகசாமி தீர்த்தவாரிக்காக கிள்ளை பகுதிக்கு வந்தார்.

அப்போது கிள்ளையை அடுத்த தைக்கால் பகுதியில் உள்ள சையத்ஷா ரகமத்துல்லா தர்காவில் பாரம்பரிய முறைப்படி பூவராகசாமிக்கு பட்டாடை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பூவராகசாமிக்கு பட்டு சாத்தி படையல் நடந்தது. இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் முஷ்ணம் பூவராகசாமி நிர்வாகம் சார்பில் நாட்டு சர்க்கரையும், மாலையும் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து சர்க்கரை மற்றும் மாலையை எடுத்துச் சென்று ரஹமத்துல்லா பள்ளி வாசலில் வைத்து பாத்தியா ஓதி அனைவருக்கும் சர்க்கரை வழங்கப்பட்டது.

இரு சமூகத்தினரும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் கிள்ளை நகர திமுக செயலாளரும், பேரூராட்சித் துணைத் தலைவருமான கிள்ளை ரவிந்திரன், பேரூராட்சி தலைவர் மல்லிகா, டிரஸ்ட் நிர்வாகி சையத்மியன்சகாப், முஷ்ணம் பூவராகசாமி கோயில் செயல் அலுவலர் கருணாகரன், சிதம்பரம் ஆனந்தீஸ்வரன் கோயில் கணக்காளர் ராஜ்குமார், விவசாயிகள் சங்க தலைவி ரங்கநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post கிள்ளையில் மாசி மக தீர்த்தவாரி பூவராகசாமிக்கு தர்கா சார்பில் பட்டாடை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dargah ,Masi Maha Theerthavari Poovaragaswamy ,Killai ,Bhuvanagiri ,Islamic Dargah ,Mushnam Poovaragaswamy ,Masi Maha Theerthavari festival ,Masi ,Maha Theerthavari Poovaragaswamy ,
× RELATED உத்திரபிரதேசத்தில் ராம நவமியை...