×

வேலூர் மத்திய சிறைவாசிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி டிஐஜி சான்றிதழ்களை வழங்கினார்

வேலூர், மார்ச் 15: வேலூர் மத்திய சிறைவாசிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையின் கீழ் இயங்கும் வேலூர் மத்திய சிறையும், தமிழ்நாடு கால்நடை பல்கலைகழக ஆராச்சி மற்றும் பயிற்சி மையம், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் இணைந்து சிறையில் உள்ள சிறைவாசிகள் 100 பேருக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராச்சி மைய இணை பேராசிரியர் பாண்டியன் வழங்கினார். நாட்டுக்கோழி வளர்த்தல், நாட்டுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள், தீவன பாராமரிப்பு, நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் நோய் தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பூசி செலுத்தும் காலங்கள், விற்பனை வாய்ப்பு, குறைந்த முதலீடு மற்றும் சிறு தொழில்கள் மேற்கொள்ள வங்கிகளில் கடன் பெறும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வேலூர் மத்திய சிறை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கி பேசினார். சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் சங்க பொருளாளர் சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் திருமாறன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறை நல அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

The post வேலூர் மத்திய சிறைவாசிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி டிஐஜி சான்றிதழ்களை வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Vellore Central Prison ,DIG ,Vellore ,Prisons and Correctional Services Department of the Government of Tamil Nadu ,Tamil Nadu Animal Husbandry… ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...