பொய்யான நம்பிக்கை இந்தத் தொழிலுக்கு வேண்டாம்!

நன்றி குங்குமம் தோழி

வாடகை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் ஒரு சின்ன ஆசை இருக்கும். குருவிக்கூடாக இருந்தாலும் அது தனக்கான கூடாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் ரியல் எஸ்டேட்டின் விலை பன் மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் பட்ஜெட் வீடுகளும் மார்க்கெட்டில் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற அனைத்து ரக அடுக்குமாடி குடியிருப்புகளை மக்களுக்கு வழங்கி கடந்த 36 வருடமாக இந்த துறையில் ேகாலூச்சி வருகிறார்கள் நவீன்ஸ் பில்டர்கள். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பவானி தங்களின் நிறுவனம் மற்றும் அதில் அவரின் பொறுப்பு குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். எங்களுடையது கூட்டுக் குடும்பம். வீட்டிற்கு ஒரே பெண் பிள்ளை என்றாலும் ரொம்ப கட்டுப்பாட்டுடன் வளர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடிச்சதும் வங்கித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த அதே வருடம் எனக்கு திருமணமானது. அதன் பிறகு குழந்தைகள், குடும்பம் என்று இருந்ததால் என்னால் ஒரு சில வருடத்திற்கு மேல் வேலையில் தொடர முடியவில்லை. நீண்ட கால விடுமுறை எடுக்க வேண்டி இருந்தது. அதனால் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். ஆரம்பத்தில் என் கணவர் CMDAவில் டெப்டி பிளானராக ஒப்புதல் அளிக்கும் துறையில் வேலை பார்த்து வந்தார்.

கிட்டத்தட்ட 17 வருடங்கள் அந்த துறையில் இருந்ததால் ஒரு கட்டிடம் அமைப்பது முதல் அதனை முழுமையாக அமைக்கும் வரை அனைத்தும் அவருக்குத் தெரியும். சில சமயம் பல கட்டிடங்கள் CMDAவின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டு இருக்கும். அதை இடிப்பதற்கான உத்தரவு வந்தவுடன் இவர் அங்கு செல்லும் போது, அங்குள்ள மக்களின் நிலை மிகவும்
பரிதாபமாக இருக்கும். அதை பார்க்கும் போது உண்மையாக ஒப்புதல் பெற்று கட்டிடம் கட்டினால் இது போன்ற நிலை ஏற்படாதே. என்னதான் லாபத்திற்காக கட்டினாலும் ஏமாற்றக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். இதில் லாபம் பார்த்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

ஆனால் அதை வாங்கியவர்கள்தான் இது போன்ற பிரச்னையில் சிக்குகிறார்கள். அதனால் மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க வேண்டும், அதில் அவங்க நிம்மதியா வாழணும்னு நினைச்சார். அந்த நோக்கத்தில்தான் 1989ல் நவீன்ஸ் ஆரம்பிச்சோம். அடுத்த வருடம் நான் அவருக்கு துணையாக விற்பனை துறையில் இணைந்து செயல்பட ஆரம்பிச்சேன்’’ என்றவர், நிறுவனத்தில் அவரின் செயல்பாடு குறித்து விவரித்தார்.

‘‘நிறுவனம் ஆரம்பித்து ஒரு வருடத்தில் விற்பனை துறையில் இணைந்தேன். எனக்கு இந்த துறைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் என் கணவர் இருந்த தைரியத்தில் செயல்பட துவங்கினேன். நான் வங்கியில் வேலை பார்த்து வந்ததால், ஆரம்பத்தில் செக் எழுதுவது, நிலுவையில் இருக்கும் பணம் குறித்து விவரிப்பது, வரவு செலவுகள் என அனைத்தும் பார்த்துக் கொண்டேன். அதனைத் தொடர்ந்து விற்பனை துறையிலும் கவனம் செலுத்தினேன்.

ஆனால் எனக்கும் அந்த துறைக்கும் சம்பந்தமே கிடையாது. காரணம், நான் அதிகமா பேசமாட்டேன். இந்த துறையை பொறுத்தவரை வாடிக்கையாளர்களை கன்வின்ஸ் செய்ய நிறைய பேசணும். என் கணவரிடம் ஆலோசனையுடன் செயல்பட்டேன். சொல்லப்போனால் நிறுவனம் ஆரம்பித்த போது அலுவலகத்தின் அக்கவுன்டன்ட், சேல்ஸ், ரிசப்ஷனிஷ்ட் எல்லாம் நான்தான்.

இதில் எனக்கு மிகப் பெரிய வசதி என் வீட்டுக்கு அருகே அலுவலகம் என்பதால், வந்து செல்ல வசதியாக இருந்தது. கூட்டுக் குடும்பமாக இருந்ததால் குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலையும் இல்லை. பிசினசில் அதிகப்படியாக கவனமும் செலுத்த முடிந்தது. என் முதல் விற்பனையும் சக்சஸாக முடித்தேன். இரண்டு நண்பர்கள் விளம்பரம் பார்த்து வந்தாங்க. விவரங்களை சொன்னேன்.

அந்தக் காலத்தில் LIC தவிர வேறு எந்த வங்கியும் வீட்டுக் கடன் தரமாட்டாங்க. பர்சனல் லோன் மட்டும்தான் வங்கிகள் வழங்கி வந்தாங்க. ஆனால் அலுவலக லோன் இருந்ததால், இவரும் சேர்ந்து இரண்டு வீட்டினை புக் செய்தாங்க. என் முதல் விற்பனையே இரண்டு வீடு என்ற போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது’’ என்றவர், தங்களின் முதல் பிராஜக்ட் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை விவரித்தார்.

‘‘என்னுடைய வேலையில் நான் பெரிய அளவில் பிரச்னைகளை சந்தித்தது இல்லை. காரணம், எந்த ஒரு வேலையாக இருந்தாலும் நான் முதலில் திட்டமிடுவேன். சில சமயம் திட்டத்திற்கு ஏற்ப அது நடக்காது. அப்போது பிரச்னைக்கான தீர்வு என்ன என்று யோசிப்பேன். அதை டென்ஷன் இல்லாமல் செய்து முடிப்பேன். எனக்கு வாடிக்கையாளர்கள்தான் முக்கியம். அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து அதை செயல்படுத்துவது சாத்தியமா என்று பார்ப்பேன்.

முடியாத போது சொல்லிப் புரிய வைப்பேன். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை நேர்மை மிகவும் முக்கியம் என்பார் என் கணவர். பொய்யான நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். சிலர் வீட்டுச் சாவியினை கொடுக்கும் முன் கூடுதலாக பணம் கேட்பார்கள். வீட்டினை பதிவு செய்யும் போது என்ன விலை சொல்கிறோமோ அதே விலையை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். ஒரு வீடு கட்டும் போது அதற்கான அனைத்து விலையும் நாம் சரியாக நிர்ணயித்தால் இது போன்ற பிரச்னையை தவிர்க்க முடியும். இதில் முக்கியமாக நாம் பயன்படுத்தும் பொருட்கள். அவை என்னவென்று தெரிந்துகொள்வதால், வாடிக்கையாளர்களிடம் நல்ல தரத்தினை எடுத்து சொல்ல உதவியாக இருக்கும்.

நாங்க இந்தத் தொழிலுக்கு முழுமையாக வரும் முன் சின்னச் சின்ன கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தோம். அந்த சமயத்தில் எங்க குடும்ப நண்பருக்கு தெரிந்தவங்களுக்கு இடம் இருப்பதாகவும். அதனை ஜாய்ன்ட் வென்சர் முறையில் கட்டித் தரவேண்டும் என்று எங்களை அணுகினார். அந்த நேரத்தில் நவீன்ஸ் என்றால் யாருக்குமே தெரியாது. ஆனால் எங்களின் குடும்ப நண்பர் தன் நண்பரிடம் நம்பி கொடுங்கன்னு சொன்னார். அவரின் நம்பிக்கையை நாங்க காப்பாற்றினோம். இப்போது சென்னையில் பல இடங்களில் நாங்க அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறோம்.

ஒரு இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட திட்டமிட்டால், முதலில் அந்த இடத்தை நாங்க போய் ஆய்வு செய்வோம். முதலில் நம்மால் வாழ முடியுமான்னு பார்ப்போம். அதன் பிறகுதான் அங்கு கட்டிடம் கட்ட திட்டமிடுவோம். அடுத்து மண்னை ஆய்வு செய்து, எவ்வளவு உயர கட்டிடம் கட்ட முடியும் என்று திட்டமிடுவோம். தொடர்ந்து CMDA சட்டப்படி அனைத்தும் தயார் செய்வோம். நாங்க கட்டும் கட்டுமானத்தில் சட்டரீதியாக பிரச்னை வரக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறோம். தற்போது சென்னையில் மட்டுமில்லாமல், விசாகப்பட்டினம், பெங்களூரிலும் எங்களின் பிராஜக்ட் நடைபெற்று வருகிறது’’ என்றவர் பெண்களுக்கு தன் அலுவலகத்தில் முன்னுரிமை கொடுத்து வருவதாக கூறினார்.

‘‘இன்று கிராமத்துப் பெண்களும் படிக்கிறாங்க. வேலைக்குப் போறாங்க. பெண்கள் இல்லாத துறையே இல்லை. எங்க அலுவலகத்திலும் பெரும்பாலான துறையில் பெண்கள்தான் நிர்வாகப் பொறுப்பில் இருக்காங்க. ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை நிறுவனத்துடன் வளர்ந்தவர்கள்தான் அதிகம். அவர்களின் வளர்ச்சிக்கு நாங்க ஒரு ஊன்றுகோலாக என்றும் இருப்போம்’’ என்றவர், தங்களின் நிறுவனம் கிரீன் பில்டிங், விஷ்வகர்மா என 60க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று இருப்பதாக கூறினார்.

தொகுப்பு: ஷன்மதி

 

The post பொய்யான நம்பிக்கை இந்தத் தொழிலுக்கு வேண்டாம்! appeared first on Dinakaran.

Related Stories: