சென்னை பெண்களின் வளர்ச்சியில் பங்காற்றும் ஜெர்மனி பெண்!

நன்றி குங்குமம் தோழி

“இந்தியா எனக்கு மிகவும் பிடித்தமான நாடு. இங்குள்ள பெண்களின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பது என் கடமை என்று நினைக்கிறேன்” என இந்தியா மீதான அன்பை பொழிகிறார் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சஸ்கியா.தன் தாய்நாடு ஜெர்மனி என்றாலும் இந்தியாவில் உள்ள பெண்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார் இவர். சென்னையில் ‘சத்யம் எம்பவர்மென்ட் சென்டர்’ என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் சஸ்கியா ரைசென் ப்ரை மற்றும் அவரது கணவர் ஜானிஸ் கெம்ப்கென்ஸ். சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் செயல்பாடு குறித்து பகிர்ந்தார் சஸ்கியா.

“சில வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு வந்திருந்த போது எனக்கு இந்த நாடு மிகவும் பிடித்திருந்தது. மக்கள் எல்லோரும் அன்புடன் பழகினார்கள். அந்த சமயத்தில் தொண்டு அமைப்புகளின் மூலம் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் சில மனிதர்களின் நட்பு எனக்கு கிடைத்தது. அதில் தொண்டு நிறுவனம் மூலம் செயல்பட்டு வந்த ஆதரவு இல்லம் ஒன்றில் குழந்தைகள், வயதானவர்கள் இருந்தனர். நானும் என் கணவரும் அங்கு அடிக்கடி செல்வோம். அவர்களுடன் அன்புடன் பழகுவோம். அந்த அமைப்பிற்காக என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன். நிதி திரட்ட தொடங்கினேன்.

அந்த சமயத்தில் இந்தியாவில் முற்காலத்தில் இருந்து இன்று வரையுள்ள பெண்களின் வாழ்க்கை முறை குறித்த தேடலில் ஈடுபட்டேன். அப்போதுதான் பெண்கள் பலரும் வளர்ச்சியடையாமல் இருப்பதை என்னால் உணர முடிந்தது. பெண்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 2017ல் சத்யம் எம்பவர்மென்ட் சென்டர் என்ற மையத்தினை நானும் என் கணவரும் தொடங்கினோம். இந்த மையம் மூலமாக பெண்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி, உபரி பொருட்களின் மறுசுழற்சி மற்றும் மேற்சுழற்சி போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறோம்’’ என்றவர், காலநிலை மீள்தன்மை (climate resilience) திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

‘‘மழைக் காலத்தில் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். அந்தப் பிரச்னைக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது காலநிலை மீள்தன்மைக்கான நிறைய தொழில்நுட்பங்கள் இருப்பதை கண்டறிந்தேன். அதை செயல்படுத்தவும் தொடங்கினோம். அதன் முதல் கட்டமாக முதலில் நாங்க செல்லும் ஆதரவு இல்லத்தினை காலநிலை மீள்தன்மை மற்றும் சுய நிலைத்தன்மையாக மாற்ற திட்டமிட்டோம். அதன் முதல் கட்டமாக மழைநீர் சேமிப்பு திட்டத்தை அங்கு செயல்படுத்தினோம்.

அடுத்து சோலார் பேனல்களை அமர்த்தி, சூரிய சக்தி மூலம் மின்சாரம் உருவாக்கம் செய்தோம். இதனால் அவர்களின் மின்சார செலவுகள் 75% குறைந்தது. இது போன்ற பல நலத்திட்டங்களை நானும் என் கணவரும் முயன்று வருகிறோம். நாங்க ஜெர்மனியில் வசித்து வந்தாலும் எங்களின் அமைப்பு சார்ந்த வேலையையும் கவனித்துக் கொள்கிறோம். மையம் தொடர்ந்து செயல்பட பணியாளர்களை நியமித்து இருப்பதால், அவர்களின் கண்காணிப்பில் பெண்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது” என்ற சஸ்கியாவை தொடர்ந்தார் மையத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் உஷ்மா கான்சாரா.

“எங்க மையத்தில் பெண்களுக்கான பயிற்சிகள் அளித்து வந்தாலும் அதில் முக்கியமாக கழிவு மேலாண்மையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். துணிக்கழிவுகள் குப்பைக் கிடங்குகளில் சேருவதை தடுக்கும் விதமாக, அதனை மறுசுழற்சி, மேற்சுழற்சி போன்றவற்றின் மூலம் மதிப்பூட்டும் பொருளாக மாற்றி அமைத்து வருகிறோம். அதற்காக பல்வேறு இடங்களில் இருந்து துணிக்கழிவுகளை சேகரித்து, முறையாக சுத்தம் செய்து மறுசுழற்சி செய்கிறோம். பலவித துணிகளை ஒன்றாக தைத்து பல்வேறு உபயோகமான பொருட்களை தயாரிக்கலாம்.

இதற்கான பயிற்சி பெண்களுக்கு அமைப்பில் அளிக்கப்படுகிறது. அது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பலனை அளிக்கிறது. நாங்க இலவச பயிற்சி தான் அளிக்கிறோம். அது அவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை கொடுக்கிறது. சிலர் சுய தொழிலும் அமைத்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். தொழிற் பயிற்சி மூலம் பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு’’ என்றவர் கழிவு மேலாண்மை குறித்து பேசினார்.

‘‘கழிவு மேலாண்மையினால் எதுவும் வீணாக்கப்படுவதில்லை. ஏற்கனவே கழிவுகளாகும் பொருட்களை மேற்சுழற்சி செய்து அதனை பயன்படுத்துவதோடு மேலும் அதிலும் மீதமாகும் கழிவுகளை கொண்டும் புதுவிதமான கலைப் பொருட்களையும் தயாரிப்பதால் இது ஜீரோ வேஸ்ட் திட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த துணிக் கழிவுகளை பேட்ச் ஒர்க்காக தயாரித்து அதனைக் கொண்டு அழகிய பைகளாக தயாரிக்கும் நிறுவனத்திற்கு வழங்குகிறோம். கிட்டத்தட்ட 1.4 டன் கழிவுகள் சேராமல் தடுக்க முடிகிறது’’ என்றார் உஷ்மா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post சென்னை பெண்களின் வளர்ச்சியில் பங்காற்றும் ஜெர்மனி பெண்! appeared first on Dinakaran.

Related Stories: