நன்றி குங்குமம் தோழி
எழுத்தாளர் பாலகுமாரன் எழுத்தைப் படித்திருக்கிறீர்களா? அவரது கதைகளில் வரும் ஆண்களை கவனித்து இருக்கிறீர்களா? 2 K கிட்ஸ் மொழியில் சொன்னால் ‘ஆண் தேவதைகள்.’
1980களில் வெளிவந்த அவரது கதைகளின் நாயகர்கள் பெண் மனம் புரிந்தவர்களாக இருந்தனர். சக மனுஷியின் வலி, வேதனை அறிந்தவர்கள். இயக்குனர் வி.சேகரின் படங்களில் வரும் நடுத்தரக் குடும்பத்தில் முன்னுதாரண பாத்திரங்களை போல மனைவியின், பிள்ளைகளின் துணியைத் துவைத்து ஆசையோடு உலர வைப்பவர்கள்.
பெண் மாதந்தோறும் வயிறு பிசைந்து அமருகையில், தலையை பிடித்துக் கொள்கையில் ஆதூரமாக உதவிக்கரம் நீட்டுபவர்கள். ‘‘பெண் வேலை – ஆண் வேலை என்று தனித்தனியாக ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்பவர்கள். சமயங்களில் நாணுபவர்கள். மிக மகிழ்ச்சியாகப் பெண்ணிடம் தோற்றுப் போகிறவர்கள். ஒரு பெண்ணின் கையில் தன் கம்பீரத்தை ஒப்படைத்து விடுபவர்கள். அதைப்போல அக் கதைகளின் நாயகியரும் தம் நாயகருக்காக நெக்குருகிப் போவார்கள்.
அவரது ஒரு நாவலில் ஒரு பாத்திரம் மனதுக்குள் தன்னைத்தானே கேட்கும், ‘‘எதற்கெடுத்தாலும் சிரிக்கிற புருஷன் இருப்பதால்தான் என் வாழ்க்கை இப்படி இருக்கிறதா? எல்லோருக்கும் அப்படி இல்லையா?’’ என்று.இது போன்ற புரிதல் கொண்ட ஆண்கள் 80 மற்றும் 90களில் இளம் பெண்களின் கனவு நாயகர்களாகவும் இருந்தனர். அப்படிப்பட்ட ‘காதலன் ஒருவன் கைப்பிடித்து, அவன் காரியம் யாவிலும் கை கொடுக்கும்’ நாயகியராகத் தம்மை வரித்துக் கொண்டனர். தன்னை ஒரு ‘பெண் வளர்த்த ஆண்’ என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார்.
அவரது படைப்புலக ஆண்கள் என்பது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். காலம் தோறும் பெண் எப்படி இருக்கிறாள்? தன்னைப் புரிந்து கொள்கிற, தன்னை கொண்டாடுகிற ஒரு ஆண் எப்போதும் அவளின் மனக்கண்ணில் இருக்கிறான். அவனுடைய காதலில் அவள் வீழ்கிறாள். காலத்தின் கண்ணாடிதானே கலையும் இலக்கியமும்… அதனால்தான் தமிழ்த் திரைப்படங்கள் வெகு காலம் ஆணின் பார்வையிலிருந்தே காதலைச் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் காலம் ரொம்பவே மாறியிருக்கிறது. பெண் திரையில் தன் மனதைப் பாடுகிறாள், ‘‘எங்கேயும் போகாமல் தினம் வீட்டினுள்ளே நீ வேண்டும்; சில சமயம் விளையாட்டாய் என் ஆடைக்குள்ளே நீ வேண்டும்” என்று உருகுகிறாள்.
தன் காதலை உலகமறியச் செய்யும் காலம் கனியாத நிலை… எனவேதான் தன் உள்ளம் கவர் கள்வனை அவள் ‘ரகசிய சிநேகிதனே’ என்று அழைக்கிறாள். ‘சின்ன சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சிநேகிதனே’ என்ற வேண்டுகோளில் என்ன இருக்கிறது? தன்னை மதிக்க வேண்டும் என்பதுதானே! இது புரியாமல்தான் பெண் மனதுக்குள் என்ன இருக்கிறது என்ற கேள்வியுடன் மருகுகிறான் ஆண். கற்கால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை எல்லா ஆண்களின் மரபணுவிலும் உறைந்திருக்கும் கேள்வி. அதற்கான விடையும் வந்துவிட்டது. ஆனால் பாருங்கள், ஆணுக்குத்தான் அந்த மொழி புரிவதில்லை.
எப்போது பெண்ணின் காதல் மனம் ஒரு ஆண் மகனை ஏற்றுக்கொள்கிறது? அவன் தனக்கு பாதுகாப்பவனாக, தன்னை பேணிக் கொண்டாடுபவனாக, தன்னை மதிப்பவனாக இருப்பான் என்று தோன்றும் பொழுதுதான். அதனால்தான் ஆணை மட்டுமல்ல, அவனது சூழலையும் சேர்த்தே அவள் பரிசீலிக்கிறாள். அந்தப் பெண் மனம் புரிந்த திரையுலக நாயகன், நாயகியின் மனதின் குரலாக பாடுகிறான், ‘என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும்’ என்று.
ஒரு திரைப்படத்தில் நாயகி தன் எதிர்கால மாமியாரின் குணங்களையும் அவரது குழந்தை வளர்ப்பு திறத்தையும் பார்த்து தன் காதலனைத் தேர்ந்தெடுக்கிறாள். பெண் வளர்த்த ஆண்-பெண் மனம் புரிந்தவன் என்பதுதான் அவளது கோணம். ஆண் என்பவன் யார்? பெண் தன்மை கொஞ்சம் குறைவான மனிதன்தானே! அதனால்தானே தன்னைக் கண்டு நாணும் ஆணைப் பெண்ணுக்குப் பிடிக்கிறது. ஒவ்வொரு ஆணையும் ஆழ்ந்து பார்த்தால் உள்ளே ஒரு குழந்தை மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறது. அது தன் மடியில் வீழ்ந்து அரற்றும் போது,
‘‘மனசை சலவை செய்ய…
ஒரு கண்ணீர் நதிதான் உண்டு…
உன் உயிரை சலவை செய்ய…
ஒரு காதல் நதி உண்டு…” என்று தேற்றுகிறாள்.
‘நீ எந்தப் பாதை ஏகும் போதும் ஊர்களுண்டு’ என்று நம்பிக்கையூட்டுகிறாள். ஆணுக்குள்ளிருக்கும் அக்குழந்தையைக் கைகளில் ஏந்தவே ஒரு பெண் விரும்புகிறாள். வெறும் புடைத்த தோள்களையும் தோலின் நிறத்தையும் அல்ல.உண்மையில் அவள் எப்போதும் மென்மையை பிரதிபலிக்கும் தன் நாயகனின் சாயலைத்தான் கலை வடிவங்களில் தேடுகிறாள். திரைப்பாத்திரங்கள் முதல் இதயம் வருடும் குரல் கொண்ட பாடகர்கள் வரை அத்தேடல் நீள்கிறது.
ஆணுக்குள் இருக்கும் பெண்ணிடம் உரையாடுவது அவளுக்கு அலாதியான அனுபவமாக இருக்கிறது. அதனால்தான் ‘நான் பேசுவதை கேட்கும் ஆண் வேண்டும்’ என்பது பெண்களின் கோரிக்கையாக எப்போதும் தொடர்கிறது. அவளுக்குத் தீர்வுகள் வேண்டாம், கேட்கும் செவிகள்தான் வேண்டும்.இருப்பதை மேம்படுத்தவும், தக்கவைக்கவும் பாதுகாக்கவும் ஒரு வல்லமையை அவளுக்கு இயற்கை கொடையாகக் கொடுத்திருக்கிறது. அதுதான் அவளைத் தன் குடும்பத்தை சிறந்த முறையில் அடைகாக்க வைக்கிறது.
ஒவ்வொரு பெண்ணைப் பற்றி சொல்லும் போதும் இளவரசி, மகாராணி என்றெல்லாம் போற்றுகிறோம். ஆம், அவருடைய உலகில் அவள் மகாராணிதான். அவருடைய பெற்றோருக்கு எப்போதுமே அவள் இளவரசிதான். தனது ஆளுகைப் பரப்பில் அவள் எளிதில் எவரையும் அண்ட விடுவதில்லை. அதே வேளையில் அவளிடம் ஒரு மந்திரக்கோலும் இருக்கிறது. தன்னை மதிக்கிற, இதமான ஒரு ஆண் மகனைக் கண்டவுடன் அவள் அதன் துணையுடன் அவனை ராஜாவாக ஆக்கிவிடுகிறாள்.
தொகுப்பு: கா.சு.துரையரசு
The post எங்கே இருக்கிறான் என் மிருதுவான ஆண்? appeared first on Dinakaran.