முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.சமீபத்தில் தஞ்சாவூர் பகுதியில் காட்டெருமை ஒன்று நகர் பகுதியில் புகுந்து மக்களை அச்சுறுத்தியது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பரக்கலகோட்டை என பல்வேறு பகுதியில் காட்டெருமை சுற்றித்திரிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதிக்குள் கடந்த 8ம் தேதி அன்று காட்டெருமை புகுந்து மக்களை அச்சுறுத்தியது. பின்னர் மறுநாள் 9ம்தேதி முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கீழ்க்காடு ரயில்வே நிலையம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை மக்களை அச்சுறுத்தியது. இதனை கண்ட மக்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த காட்டெருமை திடீரென்று மாயமாகியது.
பின்னர் ஜாம்புவானோடை, அடுத்த நாள் தில்லைவிளாகம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திற்கு சென்ற காட்டெருமை நேற்றுமுன்தினம் இரவு முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களை துரத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதனால் கிராம மக்கள் இரவு முழுவதும் தூக்கத்தை இழந்து தவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர் அங்கு முகாமிட்டு இரவு முழுவதும் விடிய விடிய கண்விழித்து காட்டெருமையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் காடுகள் நிறைந்த பகுதியில் காட்டெருமை சென்று மாயமானது. இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post முத்துப்பேட்டை பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமையால் தூக்கத்தை தொலைத்த மக்கள் appeared first on Dinakaran.