புதுச்சேரி, மார்ச் 13: ரவுடி கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதுச்சேரி வாணரப்பேட் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (48). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே தச்சம்பட்டு அருகில் உள்ள வேலையம்பாக்கம் கிராமத்தில் சீட்டு விளையாடுவதற்காக வந்தார். அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அய்யப்பனை கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் அய்யப்பனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த முத்துக்குமார், சந்துரு, குப்புசாமி, தனசேகர், விவேக், ராஜேஷ், புஷ்பானந்தம் ஆகிய 7 பேர் மற்றும் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மணிகண்டன், புவனேஷ், நடராஜன் உள்ளிட்ட 3 பேர் என 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 10 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட அய்யப்பன் உடல் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அய்யப்பன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அய்யப்பனின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து நேற்று காலை அய்யப்பன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சன்னியாசித்தோப்பு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post ரவுடி கொலை வழக்கில் 10 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.
