காட்டுமன்னார்கோவில், ஜன. 5: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் முஸ்லிம் தெருவை சேர்ந்த சல்மான் பாரீஸ் (28) என்பவர் தனது மனைவியுடன் நேற்று லால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்த சென்று உள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த 2 இளைஞர்கள் மது போதையில் சல்மான் பாரீஸ் மனைவியிடம் தவறான முறையில் கண் அடித்து சைகை காட்டி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமுற்ற அப்பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர்களை சல்மான் பாரீஸ் கண்டித்து உள்ளார். இதனால் போதை ஆசாமிகள் சல்மான் பாரீஸை தாக்கி உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உணவு விடுதி ஊழியர்கள் அவர்களை மடக்கி பிடித்து ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்த போது, காட்டுமன்னார்கோவில் புது மேலவீதி பகுதியை சேர்ந்த பரணிதரன் (21) என்பதும் இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மற்றொரு நபர் சந்தை தோப்பு தெருவை சேர்ந்த சக்திவேல் (22) என்பதும் இவர் மீது கொலை வழக்கு மற்றும் பல்வேறு அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தற்போது ஒருவருட பிணையில் வெளியே வந்ததும் இவர் பிரபல ரவுடியாக வலம் வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சல்மான் பாரீஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார், 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
