ஹஸ்தம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…

கால புருஷனுக்கு பதிமூன்றாவது (13) வரக்கூடிய நட்சத்திரம் ஹஸ்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரமானது உள்ளங்கை போலவும் நன்றாக பார்த்துக் கொண்டே இருந்தால் மயிலிறகின் பீலி போலவும் நம் கண்களுக்கு காட்சி அளிக்கிறது. கைகளுக்கு சமஸ்கிருதத்தில் ஹஸ்தம் என்று பொருள். உலக உயிர்களை காக்கும் சூரிய பகவானும் ஹஸ்த நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திரம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதம் செய்து ஹஸ்தத்தின் வழியேதான். அந்த நட்சத்திரத்திற்கு இரண்டாவதாக வருவது இதன் சிறப்பே.

ஹஸ்த நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் களிறு, நவ்வி, கெளத்துவம், கைமீன் ஆகியவை ஆகும்.

ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம்தான் இந்த ஹஸ்த நட்சத்திரத்தின் முழு வடிவமாகும்.

இந்த ஹஸ்த நட்சத்திரத்தில்தான் சூரியன், நகுலன் – சகாதேவன் மற்றும் லவ – குசா ஆகியோர் பிறந்த ஜென்ம நட்சத்திரமாகும். இரட்டையர்களை இந்த நட்சத்திரம் பிரசவிக்கிறது என்பது ஆச்சர்யம்தான்.

ஹஸ்தம் அப்பனுக்கு ஆகாது என்ற பழமொழி உண்டு. லவ – குசர்கள் தன் தந்தை என்று தெரியாமலே  ராமர் உடன் போரிடத் தயாரானார்கள். பின்பு, வால்மீகியும் சீதா தேவியும் அறிமுகப்படுத்திய பின்னே இவர்தான் தன் தந்தை என அறிந்து கொள்கிறார்கள்.

கேரளாவில் ஆவணி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்திலிருந்துதான் பத்து நாட்கள் ஒணம் பண்டிகையை கொண்டாடத் தொடங்குவார்கள்.

ஹஸ்த நட்சத்திரத்தில்தான் புதன் உச்சம் பெறுகிறார். இங்குதான் சுக்ரன் நீசமடைகிறார். அதாவது திருமகளின் ஹஸ்தத்தின் வழியே ஆசிர்வாதங்கள் அனைத்தையும் பெருமாள் பெற்று பலம் பெறுகிறார் என்பதுதான் சூட்சுமம்.
ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ள பெண்கள் மிகவும் அழகியல் தோற்றம் கொண்டவர்களாக இருப்பர். இது பெண் ராசியாக இருப்பதாலும் நட்சத்திரமும் பெண் தொடர்புடைய சந்திரனாக இருப்பதாலும் இந்த அமைப்பு உண்டு.

ஹஸ்த – விருட்சம் : வேலம்
ஹஸ்த – யோனி : பெண் எருமை
ஹஸ்த – பட்சி : பருந்து
ஹஸ்த – மலர் : அல்லி
ஹஸ்த – சின்னம் : கை (அ) உள்ளங்கை
ஹஸ்த – அதிபதி : சந்திரன்
ஹஸ்த – அதி தேவதை: ஆதித்யன்
ஹஸ்த – கணம் : தேவ கணம்

சூரியனின் பிறப்பும் ஹஸ்தமும்

ஹஸ்த நட்சத்திரத்தில்தான் சூரிய பகவான் அவதரித்தார் என ஜோதிட சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவின் மகள் உஷா தேவியை சூரியன் மணந்து கொள்கிறார். இவர்களுக்குத்தான் யமன், யமை, யமுனை என புத்திரர்கள் பிறக்கிறார்கள். சில நாட்கள் கழித்து ‘‘ சூரியனின் உக்கிரம் என்னால் தாங்க முடியவில்லை’’ என தன் தந்தையிடம் முறையிடுகிறாள் உஷா தேவி. ஆதலால், விஸ்வகர்மா சில கலைகளை ஆயுதங்களாகச் செய்து சூரியனின் வெப்பத்தை குறைக்கிறார். இங்கு, ஆயுதங்கள் என்பது செவ்வாயை குறிக்கின்றது. அவ்வாறு சித்திரை நட்சத்திரத்தை கடக்கும் பொழுது சில குறிபிட்ட நாட்களில் சூரியனை நீசமடையச் செய்கிறார். ஆனாலும், சில குறிபிட்ட நாட்கள் கழித்து மீண்டும் வெப்பமடைவதால் உஷா தேவி மிகவும் வேதனைக்குட்பட்டு தந்தையிடம் முறையிடுகிறாள்.

இந்த சூழ்நிலையில் உஷாதேவி தன்னைப் போலவே ஒரு உருவத்தை சிருஷ்டி செய்து வைத்துவிட்டு குதிரை ரூபம் எடுத்து கானகத்திற்குள் சென்று மறைந்து கொள்கிறாள். பின்பு சூரிய பகவான் சாயா தேவியை மணந்து கொள்கிறார். இந்த சாயா தேவிக்கு பிறந்த பிள்ளைகள்தான் சனி ஈஸ்வரன்.

யமனுக்கும் சாயா தேவிக்கும் பிரச்னை வந்து விடுகிறது. சின்னதாைய எட்டி உதைத்து விடுகிறார் யமதர்மன். சாயா தேவி யமனை சபித்து விடுகிறாள். பின்பு, தனது தம்பியான சனிஸ்வரனையும் அடித்து உதைக்கிறார் யமதர்மன்.
பின்பு, சூரியன் உஷா தேவியை கானகத்திற்கு தேடிச் சென்று குதிரை ரூபத்தில் உள்ள உஷா தேவியை காண்கிறார். பின்பு, இவரும் குதிரை ரூபம் கொண்டு உஷா தேவியுடன் இணைவதால் பிறப்பவர்களே அஸ்வினிக் குமாரர்கள் என்ற இரட்டையர்கள். இவ்வாறாக ஹஸ்தத்தில் பிறந்த சூரியனின் புராணங்கள் உள்ளன.

பொதுப்பலன்கள்

இந்த நட்சத்திரக் காரர்கள் எப்பொழுதும் கவலையின்றி ஆனந்தமாக இருக்கும் சுபாவம் உடையவர்களாக இருக்க விரும்புவார்கள். எவ்வளவு கவலை இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கற்பனை வளம் உள்ளவர்கள். தாயின் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். ஆனால், திருமணத்திற்குப்பின் கொஞ்சம் மாற்றத்திற்கு உட்பட்டு இருப்பார்கள். இவர்களில் சிலர் நல்ல பேச்சுத் திறமை உடையவர்கள். அன்பாகவும் பேசுவர் அதிகாரமாகவும் பேசுவர்.

ஆரோக்கியம்

ஹஸ்த நட்சத்திரக் காரர்களுக்கு சிலருக்கு தோல் தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அச்சமயத்தில் அவர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை கொடுத்து அபிஷேக அர்ச்சனை செய்து வந்தால் இந்த பிரச்னைகள் விலகுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஹஸ்த நட்சத்திரத்திற்குரிய வேதை

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். சதயம் வேதை நட்சத்திரமாக உள்ளது. எனவே, சதய நட்சத்திரத்தில் புதுவேலையை தொடங்குதல் கூடாது.

ஹஸ்த நட்சத்திரத்திற்குரிய பரிகாரம்

இந்த நட்சத்திரத்தில் அவதாரம் செய்த சூரியனையும் விநாயகரையும் வழிபடுவது சிறப்பான அமைப்பாகும். தினமும் காலையில் எழுந்தவுடன் உங்கள் இருகைகளையும் தேய்த்து லெட்சுமி தேவியை வேண்டிக்கொள்ளுங்கள் உங்களுக்கான தனம் கண்டிப்பாக வந்து சேருகின்ற உத்வேகம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும்.

The post ஹஸ்தம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.

Related Stories: