?கடலில் நீராடும்போது சிலர் புடவைகள் மற்றும் வேட்டிகள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிடுகிறார்களே, இது சரியா?
– எம்.மனோகரன், ராமநாதபுரம்.
சமுத்திரம் மற்றும் புனித தலங்களில் நீராடும்போது நாம் செய்யும் பாவங்கள் நீங்கிவிடுகிறது, தோஷம் என்பதும் நீங்கிவிடுகிறது என்பது நமது நம்பிக்கை. நாம் அணிந்துகொண்டிருக்கும் ஆடையில் நாம் செய்த பாவத்தின் பயனாக தோஷம் என்பது ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதால், அதையும் அங்கேயே கழற்றிவிட்டுவிட வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது. சாஸ்திரப்படி ஆறு, குளம் மற்றும் சமுத்திரம் போன்ற புண்ணிய தீர்த்தங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் குப்பை கூளங்களை போடக்கூடாது. இவ்வாறு தங்கள் ஆடைகளை அங்கேயே கழற்றிவிட வேண்டும் என்ற நம்பிக்கையை உடையவர்கள், ஸ்நானம் செய்தபின் அந்த ஆடைகளை கழற்றி ஒரு ஓரமாக அதற்கென தனியாக ஒரு இடத்தில் ஒரு தொட்டிபோல அமைத்து அங்கே போடலாம். நிச்சயமாக ஆடைகளை நீரிலேயே விடக்கூடாது. இதனை சாஸ்திரமும் ஏற்கவில்லை.
?இறைவனுக்கு படையல் போடுகிறோம், அந்த இலை சாப்பாட்டை யாராவது சாப்பிடலாமா?
– வண்ணை கணேசன், சென்னை.
தாராளமாக சாப்பிடலாம். ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடுகின்ற உணவு என்பதே இறைவனின் பிரசாதம்தான். இறைவனுக்கு படையல் போட்டுவிட்டு தீபாராதனை செய்து வணங்கிய பிறகு, அந்த இலையில் உள்ளவற்றை எடுத்து குடும்பத்தினர் அனைவரும் பங்கிட்டு சாப்பிடலாம். அந்த இலையில் குடும்பத்தலைவர் சாப்பிடும்போது இறையருள் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வந்து சேரும்.
?மனைவி கோயில் குளம் என்று இறைவனை வழிபடுவதன் பலன் கணவனுக்கும் சென்றடையுமா?
– ஜே.மணிகண்டன், வேலூர்.
நிச்சயமாக பலன் கிடைக்கும். குடும்பத்தலைவி செய்யும் இறைவழிபாடு அந்தக் குடும்பத்தையே நல்லபடியாக வாழ வைக்கும். அதே நேரத்தில் பரிகாரம் செய்ய முற்படும்போது அவரவருக்கு உரிய பரிகாரத்தை அவரவர் செய்தால்தான் பலன் என்பது கிடைக்கும். பொதுவாக, ஒரு குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்மணி செய்யும் வழிபாடு அவரது கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் பலனைத் தரும்.
?முன்ஜென்மம் என்பது கற்பனையா?
– சுபா, ராமேஸ்வரம்.
நிச்சயமாக கற்பனை இல்லை. “பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’’ என்று ஜோதிட சாஸ்திரமும், “பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதீ ரூபேண பீடிதே’’ என்று ஆயுர்வேத சாஸ்திரமும் உறுதியாகச் சொல்கிறது. அதாவது முன்ஜென்மத்தில் செய்த பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அமைகிறது என்றும், முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் பயனாக இந்த ஜென்மத்தில் வியாதி என்பது வந்து சேர்கிறது என்பதும் இதன் பொருள். “புனரபி ஜனனம் புனரபி மரணம்’’ என்கிற ஆதிசங்கரரின் வாக்கும் இதனை மெய்ப்பிக்கிறது. இதுபோக புதிதாக ஓர் இடத்திற்குச் செல்லும்போது அந்த இடத்திற்கு ஏற்கெனவே வந்திருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுவதை நாமே அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.
வாழ்நாளில் அப்போதுதான் முதன்முறையாக அந்த இடத்திற்கு சென்றிருப்போம். ஆனால் மிகவும் பரிச்சயமான இடம்போல அந்த பகுதியினை நாம் உணர்வதற்குக் காரணமும் முன்ஜென்ம தொடர்பு என்பதுதான். ஆக முன்ஜென்மம் என்பது நிச்சயமாக கற்பனையான விஷயம் இல்லை. பூர்வஜென்மம் என்ற கருத்தில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
?ஆலயங்களில் கோமுகம் வழியாக வெளியேறும் அபிஷேக நீரை தலையில் தெளித்துக்கொள்ளலாமா?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
அவசியம் இல்லை. இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக பிரசாதமாக அர்ச்சகர் தரும் பால், சந்தனம், விபூதி மற்றும் தீர்த்தம் ஆகியவையே போதுமானது. கோமுகத்தில் இருந்து வெளியேறும் நீர் அத்தனை சுத்தமாக இருக்காது என்பதால் அதனை தலையில் தெளித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
?ஆண்களுக்கு சொல்லும் ஜோதிட கணிப்புகள் பெண்களுக்கும் பொருந்துமா?
– வசந்தி நாகராஜன், குமரி.
பொருந்தும். ஜோதிடத்தைப் பொறுத்த வரை ஆண் பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆயுர்பலம், குடும்பம், தைரியம், கல்வி, சொத்து, சுகம், பிள்ளைப்பேறு, உடல்நிலை, வாழ்க்கைத்துணை, விரயம், பாக்கியம், பூர்வ புண்ணியம், தொழில்நிலை, தனலாபம், வெற்றி, சயனசுகம் என்று அத்தனை விஷயங்களும் அனைவருக்கும் பொது என்பதால் ஜோதிடத்தில் ஆண்களுக்கு ஒரு விதி, பெண்களுக்கு ஒரு விதி என்பது கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்தான். ஆண் பெண் என்கிற பேதம் ஜோதிட சாஸ்திரத்தில் இல்லை.
?சிவன்கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக் கூடாது என்பது ஏன்?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
சிவகணங்களின் தலைவனான நந்தியம் பெருமான், சதாசர்வ காலமும் இறைவனை நோக்கியே தன் சிந்தையும் பார்வையும் இருக்க வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றவர். இறைவனுக்கு மெய்க்காப்பாளனாகவும் தனது பணியினைச் செய்துகொண்டிருப்பவர். அவரது நேரடி பார்வை இறைவனின் மீது விழுந்துகொண்டிருக்க வேண்டும் என்பதால் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் நாம் செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள்.
?சனிதசை என்பது 19 வருடங்கள். சனிதசை நடப்பவர்கள் 19 வருடங்களுக்கும் கஷ்டப்பட வேண்டுமா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.
சனி என்றாலே கஷ்டத்தைத் தருபவர் என்று நாம் நினைப்பது முற்றிலும் தவறு. எந்த கிரஹமாக இருந்தாலும் அந்த கிரஹம் எந்த பாவகத்தில் அமர்ந்து தசையை நடத்துகிறதோ அதற்கு ஏற்றாற்போல்தான் பலன் என்பது நடக்கும். உதாரணத்திற்கு சனி என்கிற கிரஹம் நான்கு, பத்து, பதினொன்று போன்ற பாவகங்களில் அமர்ந்திருந்தால் சனிதசை நடக்கும் காலத்தில் சிறப்பான நற்பலன்களையே காண்பார்கள். எந்த கிரஹமாக இருந்தாலும் 6, 8, 12 ஆகிய பாவகங்களில் அமர்ந்திருந்தால் அந்த கிரஹங்களின் தசை நடக்கும் காலத்தில் சற்றே சிரமப் படுவார்கள். ஆக பொதுவாக சனி தசை நடக்கும் 19 வருட காலமும் சிரமம் என்று சொல்லக்கூடாது. அதேபோல ஒரு தசை என்பது 9 புக்தி என்கிற காலஅளவில் பிரிக்கப்பட்டிருக்கும். எந்த கிரஹத்தின் புக்தியானது நடக்கிறதோ அந்த கிரஹம் அமர்ந்திருக்கும் இடம் மற்றும் அந்த கிரஹத்தின் தன்மைக்கு ஏற்றவாறுதான் பலன் என்பது நடக்கும். பொத்தாம் பொதுவாக சனி தசை நடக்கும் 19 வருட காலமும் கஷ்டப்படுவோம் என்ற கருத்தில் உண்மை இல்லை.
The post முன்ஜென்மம் என்பது கற்பனையா? appeared first on Dinakaran.