×

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

*சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது

கோவில்பட்டி : கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் டிஎஸ்பி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், ராஜீவ்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான நடமாட்டம் காணப்பட்ட வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த வீட்டில் சுமார் 15 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 715 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் பெரியகுருசாமி (27), குருசாமி (23) என்பதும், வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போலீசார் சோதனை நடந்து கொண்டிருந்த போது, அங்கு புகையிலை பொருட்கள் வாங்க வந்த, பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் (52) என்பரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும். இதுதொடர்பாக மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,DSP ,Jagannathan ,Rajiv Nagar, Kovilpatti ,Task Force ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது