கும்பகோணம்: கும்பகோணத்தில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சுவாமி கோயில் உள்பட 5 கோயில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகாமக குளத்தில் தீர்த்தவாரி 12ம் தேதி நடக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் முக்கிய விழாவாக மாசிமகப்பெருவிழா விளங்குகிறது. அந்த வகையில் கும்பகோணம் மகாமக குளக்கரை அருகே அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, கொடிமரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்த பின்னர், நந்தியம்பெருமான் திருவுருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் சுவாமிகளுக்கும், கொடி மரத்திற்கும் கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர் மற்றும் அபிமுகேஸ்வரர் என மேலும் நான்கு சைவத் திருத்தலங்களிலும் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. மேலும் விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் முதன்மை ஸ்தலமான ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு மாசி மக பெருவிழா உற்சவம் நடைபெறாது என்பதால் இன்று முதல் ருத்ர ஹோமம் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு நாளை வைணவத்தலங்களான சக்கரபாணி கோயில், ஆதி வராகர் பெருமாள் மற்றும் ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நடைபெறும் விழாவில் வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சிவாலயங்களில் ஓலைச்சப்பரத்தில் ரிஷப வாகன புறப்பாடும், வைணவத்தலங்களில் ஓலைச்சப்பரத்தில் கருட வாகன புறப்பாடும், 9ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 11ம் தேதி செவ்வாய்க்கிழமை காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் ஆலய தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியாக வரும் மார்ச் 12ம் தேதி மகாமகம் தொடர்புடைய சைவத்தலங்களில் இருந்து உற்சவ சுவாமிகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.
The post கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மக விழா கொடியேற்றம்: 12ம் தேதி மகாமக குளத்தில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.
