×

விபத்து காப்பீடு திட்டத்தில் சேர நாளை கடைசி நாள்

கிருஷ்ணகிரி, பிப்.27: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து, பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள விபத்து காப்பீடு திட்டத்தை, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக, விபத்து காப்பீடு பதிவு வாரம் கடந்த 24ம் தேதி துவங்கி நாளை (28ம் தேதி) வரை அமல்படுத்தியுள்ளது.

நாள்தோறும் வேலை செய்யும் இடங்களில், வீடுகளில், பயணங்களின் போது என பல்வேறு எதிர்பாராத விபத்துகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் வருவாய் இழப்பு, கடன், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக் கூடிய, தனியார் விபத்து காப்பீடு திட்டத்தை, பொதுமக்களுக்கு இந்தியா போஸ்ட் மேமெண்ட்ஸ் வங்கி வழங்குகிறது. இத்திட்டத்தில், 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் தங்களை இணைத்து கொள்ளலாம். இதில் இணைய, ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரரின் விவரங்கள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் ₹320 செலுத்தினால் ₹5லட்சம், ₹559 செலுத்தினால் ₹10லட்சம், ₹799 செலுத்தினால் ₹15 லட்சத்திற்கு இணையலாம்.

இத்திட்டத்தில் சேர அனைத்து அஞ்சலகங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். கிருஷ்ணகிரி முழுவதிலும் இதற்கான சிறப்பு முகர்கள் வருகிற 28ம் தேதி (நாளை) வரை நடத்தப்பட உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விபத்து காப்பீடு திட்டத்தில் சேர நாளை கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri Postal Divisional ,Superintendent ,Raghavendran ,Indian Postal Department ,India Post Payments Bank ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை