கடையம், சிவகிரி மலையடிவார பகுதியில் விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

*வன பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்

கடையம் : கடையம், சிவகிரி மலையடிவார பகுதியில் விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. அவற்றை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.தென்காசி மாவட்டம் கடையம் வனச்ரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரப்பகுதியில் புகுந்து கிராம மக்களை அச்சுறுத்தி அங்குள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. கடந்த மூன்று தினங்களாக பங்களாகுடியிருப்பு, கருத்த பிள்ளையூர் ஆகிய பகுதிகளில் யானைகள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் வாழைகளை சேதப்படுத்தின.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனவர் ராஜன் மற்றும் வனத்துறையினர் மலையடிவாரப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக வெடிகள் வெடித்தும் வாகனங்களில் சைரன் சத்தம் எழுப்பியும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை துணை இயக்குனர் இளையராஜா ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘தற்போது புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதால் வனத்துறையினர் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 10 பேர் கொண்ட குழுவினர் யானை தடுப்பு முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் சோலார் மின்வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். சிவகிரி: இதேபோல் தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

அங்குள்ள கரும்பு, வாழை, தென்னை, நெல் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பதிக்கப்பட்டுள்ள குழாய்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

இதைத்தொடர்ந்து விவசாயிகளின் புகாரை தொடர்ந்து நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் அகில்தம்பி உத்தரவின்பேரில், சிவகிரி வனச்சரக அலுவலர் செங்கோட்டையன், வனவர்கள் ஜெபித்தர் சிங் ஜாக்சன் (வடக்கு பிரிவு), சந்தோஷ் குமார் (தெற்கு பிரிவு )ஆகியோர் தலைமையில் மூன்று வனக்குழுவினர் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதி, வழிவிழி கண்மாய் பகுதி, தேவிபட்டணம் கண்மாய் பகுதிகளில் வனத்துறையினர் வெடிகளை வெடித்தும் தீ வைத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர். ஆனால் ஒரு பகுதியில் இருந்து யானைகளை விரட்டும் பொழுது மற்றொரு பகுதி வழியாக யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து போக்கு காட்டி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே மாற்று வழிகள் மூலம் அனைத்து பகுதிகளிலும் இருந்து வனத்திற்குள் யானைகளை விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கூடுதல் வனத்துறையினரை இப்பகுதியில் பணியமர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

The post கடையம், சிவகிரி மலையடிவார பகுதியில் விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: