வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்: அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய், காஸ், எப்-35 போர் விமானம் வாங்க முடிவு; மும்பை தாக்குதல் தீவிரவாதியை ஒப்படைக்க சம்மதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி, டிரம்ப் இடையே நடந்த 45 நிமிட சந்திப்பில் கச்சா எண்ணெய், காஸ், எப் 35 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்செய்யப்பட்டது. அதே போல் மும்பை தாக்குதல் தீவிரவாதியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது. பிரான்ஸ் நாட்டில் நடந்த முதலாவது சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து 2 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க், குடியரசு கட்சியைச் சேர்ந்த விவேக் ராமசாமி ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்க வேண்டும் என்று மோடியிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். மேலும் உக்ரைன் போர், காசா போருக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் டிரம்பும் மோடியும் முக்கிய ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு, எப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்தல், மெகா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை உடனடியாக நாடு கடத்துவது உள்ளிட்ட பல விவகாரங்கள் முடிவு செய்யப்பட்டன. அதை தொடர்ந்து டிரம்பை இந்தியாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது டிரம்ப் கூறுகையில், ‘மும்பை தாக்குதல் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைப்போம். இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வழித்தடம் உருவாக்கப்படும். இந்த வழித்தடமானது, இந்தியாவிலிருந்து இஸ்ரேல், இத்தாலி வழியாக அமெரிக்காவிற்கு செல்லும். வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும். இருதரப்பு வர்த்தகத்தை ரூ.43 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய குழுக்கள் அமைக்கப்படும்.அமெரிக்க அணுசக்தித் துறையின் வளர்ச்சியில், இந்தியாவும் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியச் சந்தைக்கு வரவேற்கும் வகையில் சட்டங்களைச் சீர்திருத்துகிறது.அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூக மக்கள் எங்களின் முக்கியமான உறவாக உள்ளனர். விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் இந்திய துணைத் தூதரகங்கள் திறக்கப்படும்’ என்று கூறினார்.

பிரதமர் மோடி கூறுகையில், ‘என்னை அன்பாக வரவேற்ற நண்பர் அதிபர் டிரம்பிற்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தனது தலைமையின் மூலம் இந்தியா-அமெரிக்க உறவுகளை வளப்படுத்தினார். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்போம். எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை தேவை. மும்பை தீவிரவாத தாக்குதல் தீவிரவாதியான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்ததற்காக அதிபர் டிரம்பிற்கு நன்றி. இந்திய நீதிமன்றங்கள் அவரை நீதிக்கு முன்பு நிறுத்தும்.

பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் பாதையில் வளர்ந்த இந்தியா – 2047 என்ற உறுதியுடன் இந்திய மக்களும் வளர்ச்சியை நோக்கி வீறு நடைபோடுகின்றனர். இதனை ‘மகா + மிகா’ என்று வர்ணிக்கலாம். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்போது, ‘செழிப்புக்கான மெகா பார்ட்னர்ஷிப்’ உருவாகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை மீண்டும் அழைத்து செல்ல தயாராக இருக்கிறோம். உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வைக் காணும் நோக்கில் டிரம்பின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன். போரின் போது இந்தியா நடுநிலை வகித்ததாக உலகம் எப்படியோ உணர்கிறது.

ஆனால் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையில் இந்தியா அமைதியின் பக்கம்தான் உள்ளது. நான் அதிபர் புடினைச் சந்தித்தபோது, ​​இது போருக்கான யுகம் அல்ல என்றும் கூறியிருந்தேன். போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்றும் கூறியிருந்தேன். அனைவரும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே அமைதியை கொண்டு வர முடியும் ’ என்று கூறினார். டிரம்ப் – மோடி சந்திப்பின் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இந்தியா புறப்பட்டார்.

* சீனாவை ஏன் இழுக்கிறீர்கள்?
மோடி, டிரம்ப் பேச்சில் லடாக் எல்லை பிரச்னை குறித்து பேசப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில்,’ இருதரப்பு பேச்சுவார்த்தையில் மூன்றாவது நாடு பற்றி பேசக்கூடாது. சீனாவை யாரும் பிரச்னையாக்கவோ அல்லது குழு அரசியல் செய்யவோ அல்லது மோதலை தூண்டவோ முற்படவோ கூடாது’ என்றார்.

* மோடிக்காக இருக்கையை நகர்த்தி உதவிய டிரம்ப்
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து பிரதமர் ேமாடி அங்குள்ள புத்தகத்தில் எழுத அமர்ந்தார். அப்போது அவருக்காக இருக்கையை நகர்த்தி உதவிய டிரம்ப், மோடி எழுதி முடிக்கும் வரை அவரது இருக்கையின் பின்னே பிடித்தபடி நின்று கொண்டு இருந்தார்.

* தேசமே முக்கியம்
பிரதமர் மோடி கூறுகையில்,’அதிபர் டிரம்ப்பிடம் இருந்து நான் மிகவும் பாராட்டுகின்ற ஒரு விஷயம் என்னவென்றால், அவர் அமெரிக்காவின் தேசிய நலனை உச்சமாக வைத்திருக்கிறார். அவரைப் போலவே நானும் இந்தியாவின் தேசிய நலனை எல்லாவற்றிலும் முதலிடத்தில் வைத்திருக்கிறேன்’ என்றார்.

* சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்போம்: டிரம்ப்பிடம் மோடி உறுதி
அமெரிக்காவில் சட்டவிரோதமாககுடியேறிய வெளிநாட்டினர் கடத்தப்பட்டு வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்தவர்களும் 2ம் கட்டமாக இன்று நாடு கடத்தப்பட்டு வந்து சேர்கிறார்கள். இந்த சூழலில் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் கடத்தல் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,’ பெரிய கனவுகளுடனும் வாக்குறுதிகளுடனும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் கவர்ந்திழுத்து சட்டவிரோதக் குடியேற்றவாசிகளாக மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லும் மனித கடத்தலுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்து கூறுகையில்,’இது இந்தியாவைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னை. சட்ட விரோதமாக வேறொரு நாட்டிற்குள் பிரவேசித்து அங்கு வசிக்கும் எவருக்கும் அந்த நாட்டில் வாழ சட்டப்பூர்வ உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது என நாங்கள் கருதுகிறோம். இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்த வரையில், சரிபார்க்கப்பட்ட இந்தியக் குடிமக்கள் மற்றும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள், அவர்களை திரும்பப் பெற இந்தியா தயாராக உள்ளது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். இருப்பினும், எங்களைப் பொறுத்தவரை, பிரச்னை அதோடு நிற்கவில்லை. இவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தினர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

எனவே மனித கடத்தலுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இது அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் முயற்சியாகும். இந்த மனித கடத்தலை நாம் வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும். எல்லாவற்றையும் விற்கும் ஏழை மக்களுக்கு இது அநீதி. இந்த மனித கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு முழுமையாக ஆதரவளிப்பார் என்று நான் நம்புகிறேன்’ என்றார். அதே சமயம் கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்களை நாடு கடத்தியது குறித்து பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

* அமெரிக்க விஸ்கி மீதான சுங்க வரி குறைத்த இந்தியா
அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்காக அங்கிருந்து இருந்து இறக்குமதி செய்யப்படும் போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக இந்தியா குறைத்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்திக்கும் முன்பாக இந்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு போர்பன் விஸ்கியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் விஸ்கிகளில் போர்பன் விஸ்கி நான்கில் ஒரு பங்கை கொண்டுள்ளது. அமெரிக்காவுடன் ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த வரி குறைப்பை இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பின்படி, “போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி சுங்க வரி முன்பு 150 சதவீதமாக இருந்தது. இது தற்போது 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டில் படிக்க வசதியாகவும், இந்தியாவில் முதன்மையான அமெரிக்கக் கல்லூரிகளின் வளாகங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராயவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 2022-23 கல்வியாண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,68,923 ஆக இருந்தது. 2023-24 கல்வியாண்டில் 23 சதவீதம் அதிகரித்து 3,31,602 ஆக உள்ளது.

* டிரம்பிடம் அதானி குறித்து பேசினீர்களா? நிருபர் கேள்விக்கு மோடி பதில்
அமெரிக்காவில் வழக்கு பதியப்பட்ட அதானி குறித்து டிரம்பிடம் பேசினீர்களா? என மோடியிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘எந்தவொரு குறிப்பிட்ட நபரைப் பற்றியும் விவாதிக்கவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு; இந்தியர்களின் கலாசாரமானது ‘வசுதைவ குடும்பகம்’ ஆகும். உலகை ஒரே குடும்பமாக கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியரையும் எனது குடும்பமாக கருதுகிறேன். பிற நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அந்த நாடுகளில் அவர்கள் வசிப்பதற்கான வாழ சட்டப்பூர்வ உரிமை இல்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் பொறுத்தவரை, இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக யாராவது வசிக்கிறார்கள் என்றால், அவர்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். இவ்விசயத்தில் இந்தியா தயாராக உள்ளது’ என்றார்.

* மோடி மிகச்சிறந்த நண்பர் அற்புதமான மனிதர்: டிரம்ப்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள அவரது ஓவல் அலுவலகத்தில் மோடியை நீண்ட கைகுலுக்கி, கட்டியணைத்து டிரம்ப் அன்புடன் வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடி நீண்ட காலமாக சிறந்த நண்பர். அற்புதமான மனிதர் என்றும் கூறிய அவர்,’ நாங்கள் உங்களை தவறவிட்டோம். நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்துவிட்டோம்’ என்று மோடியை டிரம்ப் வாழ்த்தினார்.

* சீன மோதலில் உதவத்தயார்
அதிபர் டிரம்ப் கூறும்போது,’கிழக்கு லடாக் எல்லை பகுதியில் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல்கள் மிகவும் கொடூரமானதாக இருப்பதை நான் காண்கிறேன். அங்கு அமைதி ஏற்பட நான் உதவ தயார். சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் இணைந்து இருக்க நான் விரும்புகிறேன்’ என்றார்.

* வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை
வங்கதேசத்தில் தற்போதுள்ள நிலவரம் குறித்து பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் ஆலோசனை நடத்தினார்கள். அங்குள்ள நிலைமை குறித்து தனது கருத்துக்களை பிரதமர் மோடி, அதிபர் டிரம்பிடம் பகிர்ந்து கொண்டார்.

* அமெரிக்காவுக்கு வரிவிதிக்கும் அதே அளவுக்கு இந்தியாவுக்கு கூடுதல் வரி பிரதமர் மோடி இருக்கும் போதே அறிவித்து கெத்து காட்டிய டிரம்ப்
பிரதமர் மோடியை சந்திப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை அமெரிக்காவும் விதிக்கும் வகையிலான அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அப்போது டிரம்ப் பேசுகையில், ‘எதிரி நாடுகளைவிட நட்பு நாடுகள்தான் எங்களை அதிகம் பாதிக்கிறது. அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் பல சிறிய நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியா அதிகளவிலான வரியை விதிக்கின்றது. இந்தியா என்ன வரியை விதிக்கிறதோ, அதே அளவுக்கு வரியை நாங்கள் அவர்களிடம் வசூலிப்போம். நாங்கள் இந்தியாவுடன் பரஸ்பரம் நடந்து கொள்கிறோம். ஏனெனில் சில அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதித்துள்ள இறக்குமதி வரிகள் மிகவும் நியாயமற்றது.

மிகவும் அதிகமானது. அதிக வரியின் காரணமாக ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க முடிவதில்லை. இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. இதேதான் டெஸ்லாவுக்கும் நடக்கிறது. அதனால், பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை இனி அமெரிக்காவும் அந்த நாடுகளின் பொருள்களுக்கும் விதிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். மோடியை சந்திப்பதற்கு முன்னதாக அதிகமான வரியை இந்தியா வசூலிப்பதாகவும், இனி அதற்கு நிகரான வரியை அமெரிக்காவும் வசூலிக்கும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வெள்ளை மாளிகையில் 45 நிமிடங்கள் சந்திப்பு பிரதமர் மோடி- டிரம்ப் ஒப்பந்தம்: அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய், காஸ், எப்-35 போர் விமானம் வாங்க முடிவு; மும்பை தாக்குதல் தீவிரவாதியை ஒப்படைக்க சம்மதம் appeared first on Dinakaran.

Related Stories: