134 நகராட்சிகள், 24 மாநகராட்சிகளில் 4 வருடங்களில் ரூ.29,084 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணி: விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

சென்னை: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: மக்களில் 70% அளவிற்கு நகர்ப்புற பகுதிகளில் வசித்தும், நகர்ப்புறத்திற்கு வருகை தந்து செல்வதுமாகவும் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளும், பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளும் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் தங்களது கடமைகளாக கொண்டு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பணிகளில் ஏற்படும் தாமதத்தினை தவிர்த்திடும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசித்து பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சீர்மிகு நகரத் திட்டம், மூலதன மானிய நிதி, அம்ரூத் 2.0, தூய்மை இந்தியா திட்டம் 2.0, நமக்கு நாமே திட்டம் (நகர்ப்புறம்), நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாகவும் ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் ஜெர்மானிய வங்கியின் நிதியின் மூலமும் மொத்தம் ரூ.29,084 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்கள், சந்தைகள், அறிவுசார் மையங்கள், சாலைகள், பூங்காக்கள், நீர்நிலை மேம்பாடு, குடிநீர்வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் அனுமதிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 134 நகராட்சிகள், 24 மாநகராட்சிகளில் 4 வருடங்களில் ரூ.29,084 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணி: விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: