தெளிவு பெறுவோம்.

?வியாபார நிறுவனங்களில் குண்டாக ஒரு பொம்மையை வரவேற்பறையில் வைத்திருக்கிறார்களே, இது எதற்காக?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

அதனை “குபேர பொம்மை’’ என்று அழைப்பார்கள். “ஹேப்பிமேன்’’ என்று அந்நிய தேசத்தாரால் அழைக்கப்படுகிறது. நம்மவர்கள் அதனை செல்வங்களுக்கு அதிபதி ஆகிய குபேரனின் உருவமாகப் பார்ப்பதாலும் அந்த இடத்தில் குபேரனின் திருவருளால் செல்வம் பெருக வேண்டும் என்ற நம்பிக்கையிலும் வியாபார நிறுவனங்களில் வைத்திருக்கிறார்கள். வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு அந்த பொம்மையைக் காணும்போது மனதிற்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி என்பது உண்டாகிறது. நேர்மறையான அதிர்வலைகள் அதிமாகப் பரவும்போது அந்த இடத்தில் செல்வவளம் என்பதும் கூடுகிறது.

?அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?
– சிவாகுமார், திண்டிவனம்.

முழுமையாக கெட்ட நாட்களாக கருத முடியாது. புதிதாக துவங்கும் பணிகளை அஷ்டமி, நவமியில் செய்யக் கூடாது. மாறாக அன்றாடம் செய்துகொண்டிருக்கும் பணிகளையும், ஏற்கெனவே துவக்கிய ஒரு பணியின் தொடர்ச்சியையும் அஷ்டமி, நவமி நாட்களில் செய்யலாம். இந்த இரண்டு நாட்களும் வளர்பிறை, தேய்பிறை என்று சொல்லப்படுகின்ற ஒரு பக்ஷத்தின் நடுபாகத்தில் வருபவை. வானவியல் ரீதியாக சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே இருக்கக்கூடிய தூரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதே இந்த இரண்டு நாட்களும் ஆகும். சந்திரனை நாம் மனோகாரகன் என்று அழைக்கிறோம். அஷ்டமி, நவமி திதிகளின் காலத்தில் சந்திரனால் முழுமையாக வெற்றியைத் தருகின்ற வகையில் செயல்பட முடியாது என்பதால் அதாவது நம்முடைய மனதில் முழுமையாக நேர்மறை எண்ணங்கள் உதிக்காது என்பதால் இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள்.

?சில ஊர்களில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பலரும் ஒரு இடத்தில் கூடி கருட தரிசனம் பார்க்கிறார்களே.
– சண்முகம், திருச்சி.

ஆம் இன்றைக்கும் பல்வேறு ஊர்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட கிழமைகளில், கருட தரிசனம் பார்ப்பதற்கு என்று திரளுகின்ற பக்தர்கள் கூட்டம் உண்டு, வேதத்தின் வடிவம் கருடன், அவருடைய இறக்கைகள் மூன்று வேதங்களையும் குறிப்பன, மற்ற பறவைகளைப் போல கருடன் இறக்கையை உதறவிட்டு பறக்க மாட்டார், ஒளி மயமானவர், கூர்மையான பார்வையை உடையவர், நாகத்தை ஆப ரணமாகப் பூண்டவர், பகவானின் கண்ணாடியாக நிற்கிறார் என்று சொல்வார்கள். அதனால்தான் விஷ்ணு ஆலய புறப்பாடு சமயத்தில் கண்ணாடி சேவை நடைபெறுகிறது. கருடனை சேவித்தால் உடனே சொல்ல வேண்டிய மந்திரம் “மங்களாணி பவந்து” கருடனின் குரல் கருடத்வனி என்ற ராகமாகச் சொல்வார்கள். அதில் சில கீர்த்தனைகள் உள்ளன. மங்களகரமான ராகம். சாம வேதத்திற்கு ஒப்பானது. விவரம் தெரிந்தவர்கள் திருமாங்கல்ய தாரண சமயத்தில் இந்த ராகத்தை ஆலாபனை செய்வார்கள். உறங்கச் செல்லும் போதும், ஊருக்குச் செல்லும் போதும் திருமண விசேஷங்களின் போதும் கருட மந்திரம் சொல்வது சிறப்பு.

?இரு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படாதவாறு சென்றுவர என்ன செய்ய வேண்டும்? எந்த கடவுளின் படத்தை மாட்டி வைக்க வேண்டும்?
– அபராஜிதா, தாராபுரம்.

சாலை வழிப் போக்குவரத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் கிரஹம் செவ்வாய். அந்த செவ்வாயின் அம்சம் ஆகிய முருகப் பெருமானை வணங்குதல் வேண்டும். பயணத்தின்போது கந்த சஷ்டி கவசத்தினை உச்சரிப்பதும் நல்லது. விநாயகர், வேல்முருகன், அனுமான், வாராஹி அம்மன் போன்ற தெய்வங்களின் படங்களை மாட்டி வைப்பதும் விபத்தினைத் தடுக்கும்.

?ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?
– ராம்பிரசாத், கோவை.

வீடு கட்டலாம், கிரகப்பிரவேசம் செய்யலாம், அன்னதானம் செய்யலாம், அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல் வாங்குதல் செய்யலாம், பத்திரம் பதிவு செய்யலாம், ஹோமங்கள் செய்யலாம், புதிய பதவியோ புதிய வேலையோ ஏற்கலாம்.

?அண்ணனுக்கு முன்பு தம்பிக்கோ அல்லது அக்காவிற்கு முன்பு தங்கைக்கோ திருமணம் செய்வது சரியா?
– அ.யாழினி பர்வதம், சென்னை.

இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. யாருடைய ஜாதகத்தில் திருமண யோகம் என்பது வந்துவிட்டதோ அவர்களுக்கு திருமணத்தை நடத்திவிடலாம். ஒரு சிலருக்கு திருமணமே நடக்காமல் போய்விடுகிறது. அண்ணனுக்கு திருமணமே நடக்கவில்லை என்பதற்காக தம்பியும் அதே போல திருமணமே செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்ல இயலுமா? இது அவரவர் ஜாதக பலத்தைப் பொறுத்ததுதானே தவிர தர்மசாஸ்திர ரீதியாக இதில் எந்தவிதமான தடையும் இல்லை.

The post தெளிவு பெறுவோம். appeared first on Dinakaran.

Related Stories: