காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பில், பழைய பாடதிட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மங்கை தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளரும், அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் முதல்வருமான மங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 7 பாடங்கள் கொண்ட பழைய பாடதிட்டத்தின்படி 2002ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நடைபெற்று வந்தது. இதில், 2022ம் ஆண்டு முதல் இம்மேலாண்மை நிலையத்தில் 10 பாடங்கள் கொண்ட புதிய பாடதிட்டத்தின்படி இரண்டு பருவ முறைகளாக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
பழைய பாடதிட்டம் துவக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாலும், தற்போது புதிய பாடதிட்டம் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாலும் பழைய பாடதிட்டங்களை முடிவு கட்டப்படவுள்ளது. எனவே, பழைய பாடதிட்டத்தின்படி தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கான துணைத்தேர்வுகள் எதிர் வரும் மார்ச் மாதத்தில் நடத்த தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியினை பழைய பாடதிட்டத்தில் முழுநேரம் அல்லது அஞ்சல் வழியில் பயின்று தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம். 10 (அ) 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், இறுதியாக தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல் மற்றும் தேர்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத்தொகை ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.5A, வந்தவாசி சாலை (மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில்), காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 98946 08112 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post காஞ்சியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட்டுறவு மேலாண்மை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.