சென்னை: சென்னையைச் சேர்ந்த சபீனா முகமது மொய்தீன் என்பவரின் கணவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். 2023ல் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சபீனா, அபுதாபி சென்றிருந்தார். ஊர் திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் கையில், 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்கள் அணிந்திருந்ததை பார்த்து பறிமுதல் செய்தனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அந்த வளையல்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுங்கத்துறைக்கு அனுப்பிய மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடக்கோரி சபீனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. சுங்கத்துறை வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது மரபு. மனுதாரர் தங்க வளையல்களை ரகசியமாக மறைத்து எடுத்து வராத நிலையில் அவற்றை பறிமுதல் செய்தது முறையற்றது. எனவே, ஏழு நாட்களில் பரிசீலித்து நகைகளை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post திருமண நிகழ்ச்சியில் அதிக தங்க வளையல்கள் அணிவது இந்திய கலாச்சாரம் பெண்ணிடம் பறிமுதல் செய்த 10 வளையல்களை திரும்ப தர வேண்டும்: சுங்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.