1,200 மீட்டர் ஓடுதளத்துடன் புதுப்பிப்பு பணிகள் நிறைவு: நெய்வேலியில் இருந்து விரைவில் விமான சேவை; என்எல்சி அதிகாரிகள் தகவல்

ஒன்றிய அரசின் ‘உடான்’ என்பது வணிகம் சார்ந்த ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் ஒரு மார்க்கத்தில் விமான சேவை தொடங்கப்பட்டால் அதற்கு கிடைக்கும் வரவேற்பு, கூடுதல் தேவை உள்ளிட்ட பல காரணிகளை வைத்து அவ்வப்போது அந்த விமான மார்க்கத்திற்கான ஏலம் நடைபெறும். இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 இடங்களை ஒன்றிய அரசு தேர்வு செய்தது. இதில் நெய்வேலியில் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளது.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின்கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி நிறுவனத்தில் பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், சோலார் மின் நிலையங்களில் உயர் அதிகாரிகள் முதல் தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி தலைவர் மற்றும் இயக்குநர்கள் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னை சென்று வருவதற்கு நெய்வேலியில் விமான சேவை வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து சிறிய ரக விமானங்கள் இயக்குவதற்கு என்எல்சி ஆர்ச் கேட்டில் இருந்து என்எல்சி நிறுவன தலைமை அலுவலகம் எதிரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து நெய்வேலிக்கு சிறிய ரக விமான போக்குவரத்து தொடங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சுமார் 45 நிமிடத்தில் சென்னை சென்றனர். ஆரம்ப காலத்தில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் நாளடைவில் மக்கள் பயணிக்க ஆர்வம் காட்டாததால் விமான நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் விமான சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் மக்கள் விமான பயணம் மேற்கொள்ளும் வகையில் விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியது. இதில் என்எல்சி நிறுவனத்திற்கு செந்தமான இடத்தில் விமான சேவை தொடங்க ஒன்றிய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் நெய்வேலியில் விமான நிலையம் புதுப்பிக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. சுமார் 1,200 மீட்டர் ஓடுதளம், விமான ஓடுபாதைகளை சீரமைக்கும் பணிகள், மிகப் பெரிய சுற்றுச்சுவர், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றது. மேலும் விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிகளுக்கு ஒன்றிய தொழிலக பாதுகாப்பு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதுகுறித்து என்எல்சி நகர நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘நெய்வேலியில் விமான நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பான லைசென்ஸ் பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் விமான சேவை தொடங்கும். இந்த விமான சேவை தொடங்கப்பட்டால் முதல்வர், ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், என்எல்சி தலைவர், இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் பயனடைவார்கள்’ என்று கூறினர்.

The post 1,200 மீட்டர் ஓடுதளத்துடன் புதுப்பிப்பு பணிகள் நிறைவு: நெய்வேலியில் இருந்து விரைவில் விமான சேவை; என்எல்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: