திருமயம் சமூக ஆர்வலர் கொலையில் 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி விடிய விடிய விசாரணை

திருமயம்: திருமயம் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கஸ்டடி எடுக்கப்பட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். 2வது நாளாக இன்றும் விசாரணை நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்த ஜகபர்அலி(58). சமூக ஆர்வலரான இவர், சட்டவிரோத கனிம வளக்கொள்ளைக்கு எதிராக பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி அன்று லாரி மோதி இறந்தார். முதலில் விபத்தாக பார்க்கப்பட்ட இந்த வழக்கில் ஜகபர்அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் இந்தக் கொலையில் தொடர்புடைய குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசு, இவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி டிரைவர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேருக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசாரால் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். சிபிசிஐடி போலீசார், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனர். இதனையடுத்து 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி பாரதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார், சம்பந்தப்பட்ட 5 பேரையும் பலத்த பாதுகாப்போடு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினர். பின்னர் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஆயுதபடை மைதானத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று இன்று அதிகாலை வரை விடிய விடிய 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெறுகிறது. அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

The post திருமயம் சமூக ஆர்வலர் கொலையில் 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: