வக்ஃபு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மெளனம் காப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: வக்ஃபு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மெளனம் காப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.

வக்ஃபு வாரிய சொத்துக்கள் என்பது இஸ்லாமியப் பெரியவர்கள் அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இறை இல்லங்களை எழுப்பி வழிபாடு செய்வதற்காகவும், சமூக நலத் தொண்டுகளுக்காகவும் இறைவனுக்காக கொடுக்கப்பட்ட அர்ப்பணிப்பு சொத்துக்களாகும். இந்த சொத்துக்களை பயன்படுத்தும் முழு உரிமையும் இஸ்லாமிய சமூகத்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்றாலும், அதனை தனிப்பட்டவர்கள் உரிமை கூட கொண்டாட எவ்வித அனுமதியும் இல்லை. அதனால், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024, வக்ஃபு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதற்கெதிராக நாடு முழுவதும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சட்டத் திருத்தம் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், அந்த ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானதுதான். எனவே, மத்திய அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post வக்ஃபு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மெளனம் காப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: