தை அமாவாசையான நேற்று பத்ர தீப விழாவையொட்டி காலை 11 மணிக்கு சுவாமி, அம்பாள் உள்பட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதன்பின் மாலையில் தங்க விளக்கிலிருந்து தீபம் எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி பெரிய கொடிமரம் மாக்காளை முன்பாக நந்தி தீபம் ஏற்றிய பின் பத்ரதீபம் ஏற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சுவாமி சன்னதி உள், வெளி பிரகாரங்கள், காந்திமதி அம்மன் சன்னதி உள், வெளிபிரகாரங்கள், ஆறுமுகநயினார் சன்னதி உள், வெளி பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்களை பக்தர்கள் ஏற்றினர். பத்தாயிரம் தீப ஒளியில் நெல்லையப்பர் கோயில் ஜொலித்தது. இதைத்தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்கள் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி சன்னதி வெளிபிரகாரம் சுற்றிவரும் வைபவமும், தொடர்ந்து ரதவீதி வலமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
The post நெல்லையப்பர் கோயிலில் பத்ரதீப விழா கோலாகலம் appeared first on Dinakaran.