விஜயநகரப் பேரரசை ஆண்ட மாமன்னர்கள் வரிசையில் மிகவும் புகழ் வாய்ந்தவர், கிருஷ்ணதேவராயர் ஆவார். இப்பெருமகனார் தெலுங்கராய்ப் பிறந்தாலும், தமிழ் மண்ணை மிகவும் மதித்த பண்பாளர் ஆவார். தேசிய ஒருமைப்பாடு என்ற அற்புதத் தத்துவத்தை இப்பெருந்தகையாளரின் சாசனம் ஒன்று தெளிவாக விவரிக்கின்றது. வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த சாசனம், மகர சங்கராந்தியன்று அளிக்கப்பட்ட ஓர் அறக்கட்டளை பற்றி விளக்குகின்றது. கி.பி.1517ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28ஆம் நாள், மாமன்னர் கிருஷ்ணதேவராயர் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணவேணி ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்தார்.
அப்போது உண்டவல்லி அனந்தசாயியாம் பெருமாள் முன்பும், விஜயவாடா மல்லிகார்ஜுனர் சந்நதியிலும் அமர்ந்து தமிழ்நாட்டில் சோழ மண்டலத்தில் உள்ள முக்கிய விஷ்ணு தலங்கள், சிவத்தலங்களில் பூஜைகள் நடைபெறுவதற்காக தனது அரசாங்கத்திற்கு பல்வேறு வரிகள் மூலமாகக் கிடைக்கும் பத்தாயிரம் (10,000) வராகன் பொன்னை அளித்து, அத்தலங்களின் பட்டியலையும், அரசு ஆணையாகப் பிறப்பித்தார்.
இவ்வாறு அளிக்கப்பட்ட பத்தாயிரம் வராகன் பற்றிய சாசனத்தின் நகல்களை, சோழ மண்டலத்தில் உள்ள அந்தந்தக் கோயில்களில் கல்வெட்டாகப் பொறிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார். மன்னனின் இந்த அற்புத சாசனம் ஒன்று இன்றும் திருச்சி மாவட்டம், குளித்தலை முசிறிக்கு அருகில் உள்ள திருவேங்கிமலை (திரு ஈங்கோய்மலை) மலைக் கோயிலின் நுழைவு வாயிலில் உள்ளது.
அக்கல்வெட்டு சாசனமாவது, ‘‘ஸ்வஸ்தி ஸ்ரீவிசாயப்யுதய சாலிவாகன சகாப்தம் 1439 இதன் மேல் செல்லா நின்ற ஈசுவர சம்வத்ஸரம் ஸ்ரீமன் மகா மண்டலேசுவரன் அரிராயவிபாடன், பாஷைக்கு தப்புவராய கண்டன், கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான், பூர்வ தக்ஷிண பச்சிம உத்தர சது சமுத்திராதிபதி ஸ்ரீவீரப்பிரதாப ஸ்ரீவீர கிருஷ்ணதேவ மகாராயர் சோழ மண்டலத்து விஷ்ணு ஸ்தானம் சிவஸ்தானம் முதலான தேவஸ்தானங்களுக்கு சோடி, சூலவரி, புற வரி, அரசு பேறு மற்றும் உண்டானது எல்லாம் சர்வ மானியமாக திருவுளம் பற்றிய தர்ம சாசன ராயசம்.
நாம் விஜயநகரத்திலிருந்து புறப்பட்டு பூர்வதிக்கு விசையார்த்தம் எழுந்தருளி உதயகிரி துர்க்கமும் இரிசிக்கொண்டு, திருமலை ராகுத்த ராயனையும் பிடித்துக் கொண்டு வினிகொண்டை, வெல்லம் கொண்டை, நாகார்சுன கொண்டை, கொண்ட வீடு, கொண்ட பல்லி, ராச மகேந்திர வரம் முதலான துர்க்கங்களுக்கும் இரிசிக் கொண்டு, பிரதாபருத்திர கசபதி குமாரன் வீரபத்திரனையும், சிரசந்திரன் உத்தண்ட கான் முதலான சாமந்தரையும், சீவாக்கிரமமாகப் பிடித்துக் கொண்டு, பிரதாப ருத்திர கசபதியையும் முறிய வெட்டி, பொட்டுனூரில் ஜயஸ்தம்பம் நிறுத்தி, சோழ மண்டலத்தில் தேவஸ்தானம் திருச்சிராப்பள்ளி, திருஈங்கோய்மலை, சந்தல கை, திருக்காட்டுப் பள்ளி, திருமழவாடி, வல்லம், தஞ்சாவூர்,
திருநல்லூர், திருவாரூர், திருநகரி, திருவையாறு, திருவெழுந்தூர், ராசுராமப்பாளையம், திருவாஞ்சியம், திருப்புகலூர், திருப்பனந்தாள், திருநாங்கூர், தாடாளங்கோயில், சீர்காழி, அரிகண்டபுரம் உள்பட இரண்டாற்றுப் பற்றுச் சீமை புவனேசுவீரன் பட்டனச் சீமை, ராசராசசுரச் சீமை, வீரமடக்கு சீமை, வழுதலம்பட்டு சீமை, வழுவத்தூர் சீமை, பெரம்பூர் சீமை, குழித்தண்டலைச் சீமை உட்பட்ட விஷ்ணு ஸ்தானம், சிவஸ்தானம் தேவஸ்தானங்களில் பூர்வம் முதலாக அரைமனைக்கு இறுத்து வருகிற சோடி, சூலவரி ஆயம் ஸ்தல யாதிக்கம் பதினாயிரம் பொன்னிலே அந்தந்த தேவஸ்தானங்களுக்கு மகர சங்கராந்தி புண்ணிய காலத்திலே கிருஷ்ணவேணி தீரத்திலே உண்டவல்லி அநந்தசாயி சந்நதியிலும், விஜயவாடா மல்லிகார்ஜுன தேவர் சந்நதியிலுமாக தாராபூர்வமாக சர்வ மானியமாக விட்டு தர்ம சாசன ராயசமும் பாலித்தோம்.
இந்த ராயசப் பிரமாணத்திலே எல்லா தேவஸ்தானங்களிலும் சிலா சாசனம் எழுதுவிச்சு, பூஜை புனஸ்காரமும் அங்க ரங்க வைபோகமும் திருப்பணிகளும் சாங்கோபாகமாக நடத்திக் கொண்டு சுகத்திலே இருக்கவும், இந்த தர்மத்துக்கு அசிதம் நினைத்தவன், தங்கள் தங்கள் மாதா பிதாவையும், கோ பிராமணரையும் வாரணாசியிலே கொன்ற பாவத்திலே போகக் கடவராகவும்’’ என்பதாகும்.பல நூறு மைல்களுக்கு அப்பால் அமர்ந்து கொண்டு, சோழநாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு பூஜைகள் நடைபெற, தனது அரண்மனை வரியிலிருந்து பத்தாயிரம் வராகன் பொன் அளித்த அம்மன்னவனின் மாட்சிமையை நினைவுகூர்வோம்.
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
The post மகர சங்கராந்தியன்று மாமன்னனின் கொடை appeared first on Dinakaran.
