தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் ஒமியத் கூட்டமைப்பின் பொன்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் ஒமியத் கூட்டமைப்பின் பொன்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். சென்னையில் ‘ஓமியத்” கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அகமத் மீரான், பொருளாளர் முகமது ஹனிப் காதீப் துணைத் தலைவர் இப்னுசவுத் துணைச் செயலாளர் டாக்டர் நிசார் அக்தர், ஒருங்கினைப்பாளர் பாத்திமா முசாபர் ஆகியோர் இன்று கூறியதாவது:தமிழ்நாட்டில் உள்ள 520 கல்வி நிலையங்கள் ஒருங்கிணைந்து, தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் “ஓமியத்” என்ற கூட்டமைப்பு 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் பொன்விழா ஐம்பதாவது ஆண்டை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இருநாட்களில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் நடக்க உள்ளன.

இதில்தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஓமியத் பொன்விழா உரை நிகழ்த்தி வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்குகிறார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், பள்ளிக் கல்வி துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வக்பு வாரியத் தலைவர் கே. நவாஸ் கனி மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய அளவிலான கல்வி ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். ஒன்றிய அரசும், கடந்த கால அதிமுக அரசும் பிறப்பித்த பல அரசு ஆணைகள் தமிழ்நாட்டு கல்வி நிலையங்களின் சராசரி நடப்புகளை முடக்கும் வகையில் உள்ளன.

அவை தொடர்பாக தீவிர பரிசீலனை நடத்தி, உரிய சுமுகமான ஆணைகளை பிறப்பிக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
பல்கலைக்கழக நல்கைக் குழு (யுஜிசி), அனைத்திந்திய தொழிற் கல்விக் கழகம் என்ற ஏ ஐ சி டி இ ஆகியவை பிறப்பித்துள்ள பல்வேறு கல்வித்துவ அறிவிக்கைகள் தமிழ்நாடு கல்விக்கூடங்களின் இயல்பு இயக்கத்தில் இடர்பாடுகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் கவனத்தை செலுத்தி, உரிய திருத்தங்களை வழங்குமாறு அந்த நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் ஒமியத் கூட்டமைப்பின் பொன்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: