2026 தேர்தலிலும் வெற்றி நமக்கே என்ற நம்பிக்கை கூடுகிறது பிப்.6,7 தேதிகளில் திருநெல்வேலியில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறேன்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முதல்வர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து நிகழ்வு நடைபெறும் இடத்திற்குக் காலையில் நடந்து சென்றபோது, சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ -மாணவியர் தங்களின் அன்பான குரலில், ‘அப்பா..’ என்றழைத்து மகிழ்ந்ததுடன், பலர் செல்பி எடுத்துக் கொண்டனர். சமூகநீதிப் போராட்டத்தில் அ.தி.மு.க. அரசின் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கும் நினைவரங்கத்தை விழுப்புரத்தில் திறந்துவைத்து, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 21 சமூகநீதிப் போராளிகளின் சிலைக்கும் மலர் தூவி, அவர்தம் குடும்பத்தாருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

உதயசூரியன் சின்னத்தில் முதன்முதலில் வென்றவரான முன்னாள் அமைச்சர் ஏ.ஜி. எனப்படும் ஏ.கோவிந்தசாமியின் நினைவாக அவரது சிலையுடன் திராவிட மாடல் அரசு அமைத்துள்ள மணிமண்டபத்தையும் திறந்து வைத்தேன்.
இரு மண்டபங்களையும் திறந்து வைத்தபிறகு, விழுப்புரம் மாவட்டத்திற்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும் புதிதாக 11 திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசால் நிதி நெருக்கடி நீடித்தாலும், அதனையும் எதிர்கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றியே தீருவோம் என்ற உறுதியை வழங்கினேன்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் ஆதரவு நமக்குத்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குகின்ற மக்களுக்கு என்றும் துணை நிற்போம். அவர்களின் ஆதரவுடன் ஏழாவது முறையாகத் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் என்ற வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்படும் இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 6, 7 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறேன். அப்போது உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.

The post 2026 தேர்தலிலும் வெற்றி நமக்கே என்ற நம்பிக்கை கூடுகிறது பிப்.6,7 தேதிகளில் திருநெல்வேலியில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறேன்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: