ஈரோடு இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என சீமான் சர்ச்சை பேச்சு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, நடந்த பொதுக்கூட்டத்தில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், வெடிகுண்டை வீசி விடுவேன் என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார். சீமானை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். மேலும், பெரியாரிய அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலையொட்டி, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், நாம் தமிழர் கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சீமானும், அக்கட்சி நிர்வாகிகளும், தொடர்ந்து தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இடைத்தேர்தலையொட்டி, நாதக சார்பில், அசோகபுரம் நெரிக்கல் மேட்டில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், சீமான் பேசுகையில், ‘‘உன் பெரியாரிடம் வெங்காயம்தான் உள்ளது.

என்னிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை வீசு. நான் வெடிகுண்டை வீசுகிறேன். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டு வீசினால், உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது’’ என்று பேசினார். இடைத்தேர்தலையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் இப்படி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விவகாரம் குறித்து சீமான் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியாரிய அமைப்புகள், காங்கிரஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

* தேர்தல் விதி மீறல் சீமான் மீது வழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது, தேர்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாகவும் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு நெரிக்கல்மேட்டில் நேற்று முன்தினம் மாலை நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து, மாலை 6.15 மணிக்கு பொதுக்கூட்டத்தை தொடங்கி இரவு 9.15 மணி வரை நடத்தினர். இது குறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன் புகாரின்படி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ஈரோடு இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என சீமான் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: