எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் நீக்கம்

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக மொரப்பூர் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப்பட்டார். அவர் மாநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஆய்வு மேற்கொண்டு வந்தார். அனைத்து நிர்வாகிகளையும் மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அனுமதி வழங்கினார். இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நீண்ட நாட்களாக பொறுப்பில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் இறுதி கட்டமாக கடந்த 9 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாசலம் இன்று அதிரடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவருக்கு கொள்கை பரப்பு மாநில துணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக முன்னாள் எல்எல்ஏ எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி 2 செயலாளரும் முன்னாள் மண்டல குழு தலைவரான ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றப்பட்டுள்ள வெங்கடாசலம், 2 முறை எல்எல்ஏவாக இருந்துள்ளார். 10 ஆண்டுகள் சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், 9 ஆண்டுகள் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென அவர் மாற்றப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது மாநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எல்எல்ஏ செல்வராஜ், 11 ஆண்டுகள் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். ஒரு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். அதே போல இன்னொரு பொறுப்பாளரான ஏ.கே.எஸ்.எம்.பாலு, 2 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டல குழு தலைவராகவும் இருந்துள்ளார். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக இரண்டாக உடைந்த நிலையில் கூட எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் வெங்கடாசலம் இருந்தார். இவ்வளவு நெருக்கமாக இருந்த வெங்கடாசலமே பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பொதுச்செயலாளர் என்ன சொன்னாலும் அதனை ஏற்றுக்கொண்டு அவரது தலைமையில் செயல்படுவேன் என மாற்றப்பட்ட வெங்கடாசலம் கூறினார்.

The post எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: